பொது செய்தி

தமிழ்நாடு

தந்தை வில்லனாக இருந்தால் தான் பிள்ளைகள் ஹீரோ

Added : டிச 01, 2019
Advertisement

கள்ளக்குறிச் : தந்தை வில்லனாக இருக்கும் வரை தான் பிள்ளைகள் ஹீரோவாக திகழ்கின்றனர் என்று உளவியல் நிபுணர் புகழேந்தி உருக்கமாக பேசினார்.

கள்ளக்குறிச்சியில் 'தினமலர்' நாளிதழ், நடத்திய 'சக்சஸ் மந்த்ரா' நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:மாணவ மாணவிகள் தங்களது குறிக்கோளினை முடிவு செய்து, அதனை நிறைவேற்றும் வகையில் பயணிக்க வேண்டும். உங்களுக்குள் பல்வேறு திறமைகள் உள்ளன.ஆனால், தேவையான இடத்தில் பயன்படுத்துவது இல்லை. நாம் வெற்றி பெற உழைக்கும்போது நம்முடன் இருப்பவர்கள், வெற்றி இலக்கினை அடைந்த பிறகு நம்முடன் இருப்பதில்லை.

மாணவர்கள் தங்களுடைய தந்தையை வில்லனாகவே பார்க்கிறீர்கள், அவர்கள் வில்லனாக இருக்கும் வரை தான் நீங்கள் ஹீரோ. வில்லன் என்ற கதாப்பாத்திரம் இல்லையெனில் நீங்கள் ஜீரோ.தந்தை உங்களை திட்டி, உங்களிடம் கெட்டப்பெயரை வாங்குவது, நீங்கள் மற்றவர்களிடம் கெட்டப்பெயர் வாங்கக்கூடாது என்பதற்காக தான். இன்றைய தலைமுறைகள் முற்றிலும் மாறிவிட்டது. ஒரு தலைமுறையை மற்றொரு தலைமுறையுடன் இணைக்க கல்வி மிக அவசியமாகிறது.

பள்ளிக்கு செல்வது நமது கடமை அல்ல, பொறுப்பு. இன்றைய தலைமுறை நட்பில் நேர்மை குறைந்து விட்டது. பலனை எதிர்பாராமல் தேவைப்படுவதை நம்மிடம் கொடுத்து, காணாமல் போவதே உண்மையான நட்பு.உங்கள் பெற்றோர்கள் உங்கள் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். சந்தோஷம், நேரம் என அனைத்தையும் உங்களுக்காக தியாகம் செய்கின்றார்கள். அவர்கள் இழந்ததை பிள்ளைகளாகிய நீங்கள் தான் மீட்டு கொடுக்கவேண்டும். சம்பாதித்து பணம் கொடுப்பதன் மூலம் அது திரும்பிவிடாது.

கல்வியறிவு மூலம் வாழ்க்கையில் உயர்ந்து, உங்கள் குடும்பத்தின் நிலையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றினால் மட்டுமே அது முடியும். பெற்றோர் என்பவர் பிடித்ததை செய்பவர்கள் அல்ல, பிடித்தவர்களுக்காக செய்பவர்கள்.சிறு வயதில் உங்களுக்கு சைக்கிள் கற்றுக்கொடுக்கும் போது 'பின்னாடி அப்பா இருக்கிறேன்; நீ முன்னாடி பார்த்து செல்' என்று கூறும் வார்த்தை சைக்கிள் கற்று கொடுப்பதற்கு மட்டுமல்ல, உங்களுடைய வாழ்க்கைக்கும் சேர்த்து தான்.விதிமுறைகளை அவர்கள் கடைபிடிப்பது பயந்து அல்ல, தான் செய்யும் தவறு என் பிள்ளையை பாதிக்க கூடாது என்பதற்காக. பிளஸ் 1, பிளஸ் 2 பயணம் மிக அழகானது.

வாழ்க்கையில் இறந்த காலத்தை நிகழ்காலமாக்கிய பெற்றோர்களையும், நிகழ்காலத்தை மகிழ்ச்சியாக்கும் நண்பர்களையும், எதிர்காலத்தை அமைத்து கொடுக்கும் ஆசிரியர்களையும் என்றும் மறக்ககூடாது.இதுவரை நடந்ததை விட்டுவிடுங்கள், இனி முயற்சி செய்தால் கூட கட்டாயம் சாதிக்க முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X