திருவண்ணாமலை: ''மகா தீபத்தன்று, மலை மீது ஏற நீதிமன்ற உத்தரவுபடி, 2,500 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்,'' என, கலெக்டர் கந்தசாமி பேசினார்.
திருவண்ணாமலையில், தீப திருவிழா தொடங்கியுள்ள நிலையில், முன்னேற்பாடு வசதி குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. கலெக்டர் கந்தசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், தீப திருவிழாவன்று கிரிவலப்பாதையில் உள்ள குளம் மற்றும் நகரில் உள்ள சில குளங்களில் கழிவு நீர் கலக்கிறது. இதை தடுத்திட வேண்டும். தேருக்கு கட்டை போடுபவர்களுக்கு, அசம்பாவிதம் நடந்தால் ஐந்து லட்ச ரூபாய் இன்சூரன்ஸ் பாலிசி தொகைக்கு கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இதை, 10 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். கூடுதல் பஸ், சிறப்பு ரயில்கள் இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதற்கு பதிலளித்து கலெக்டர் கந்தசாமி பேசியதாவது: விழாவை முன்னிட்டு, 2,500 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். 14 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும். கிரிவலப்பாதையில், குடிநீர், கழிப்பறை வசதி போதுமான அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தற்போது மலை பசுமையாக்கப்பட்டு, ஆங்காங்கே நீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளதால், மான் போன்ற வன விலங்குகள் வெளியே வந்து சாலையை கடக்காததால் உயிரிழிப்பு தடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுபடி, 2,500 பேர் மட்டும் மலை மீது ஏற அனுமதிக்கப்படுவர். மலை மீது ஏற முடியாதவர்கள், நெய் காணிக்கை செலுத்த விரும்புவர்கள் கொடுக்கும் நெய் காணிக்கையை கோவில் நிர்வாகம் மூலம், மலை மீது கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோவிலினுள் பணியாளர்கள் செல்ல, கோவில் நிர்வாகம் மூலமும், பாதுகாப்பில் ஈடுபடும் போலீசாருக்கு, காவல் துறை மூலமும் பாஸ் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.