வீரபாண்டி: மேகமூட்டத்துடன் சாரல் மழை பெய்ததால், குளுமையான சூழலை சேலம் மக்கள் அனுபவித்தனர்.
தமிழகம் முழுவதும், மூன்று நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்யும் என, வானிலை மையம் அறிவித்திருந்தது. கடலோர மாவட்டங்களுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை விடப்பட்டது. சேலத்தில் கடந்த நான்கு நாட்களாக காலை, 6:00 மணி முதல், 10:00 மணி வரை மட்டும் ஆங்காங்கே தூறலாக மழை பெய்து வந்தது. நேற்று காலை முதல் வானம் கருமேகங்கள் சூழ்ந்து, எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு இருளாக மாறியது. மாவட்டம் முழுவதும் பரவலாக சாரல் மழை பொழிந்தது. இதனால் வாகன ஓட்டிகள், முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மழையை அனுபவித்தபடி சென்றனர். சாரல் மழை, வாகன ஓட்டிகள் உடலில் ஊசியாய் இறங்கி குத்தினாலும், மலை வாசஸ் தலங்களை போல், நல்ல குளுமையான சீதோஷ்ண நிலையை மக்கள் அனுபவித்தனர்.