சேலம்: தமிழகத்தில் முதன்முறையாக வழக்குகளுக்கு விரைவாக தீர்வு காணும் வகையில், சமரச மற்றும் நடுவர் மையம் தொடங்கப்பட உள்ளது. இதன் அறிமுக விழா நேற்று சேலத்தில் நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் இணை தலைவரும், கல்லூரியின் செயலாளருமான சரவணன் தலைமை வகித்தார். இதில், சென்னை உயர்நீதிமன்ற வக்கீல் மற்றும் அங்கீகாரம் பெற்ற சமரச தீர்வு மைய வல்லுனர் கவிதா பேசியதாவது: நீதிமன்றத்தில் வழக்கிடுவது மட்டுமே தீர்வு முறை என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டு வருகிறது. இத்தீர்வுக்கு நீண்ட கால விரயம், பொருட்செலவு, மன உளைச்சலும் உண்டாகிறது. பாரம்பரிய முறையில், பிணக்குகளை சமரச முறையில் எளிதாக தீர்க்க, சமரச தீர்வு மையம் உதவும். அவர்களாகவே தீர்வு பெறுவதால், தொடர்ந்து மேல் முறையீடு இல்லாத சூழல் ஏற்பட்டு, காலவிரயம் மற்றும் நீதிமன்றங்களின் பணிச்சுமை தவிர்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். சேலம் மாநகரத்தின் முக்கிய சங்கங்களான ரோட்டரி, ஜூனியர் சேம்பர், இன்னர் வீல், லயன்ஸ் கிளப், இந்திய மருத்துவ சங்கம், சிவில் பொறியாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்க உறுப்பினர்கள் பங்கேற்றனர்.