வெற்றியின் ரகசியம் அறிய ஆர்வத்துடன் குவிந்த மாணவர்கள்: காலைக்கதிர் நிகழ்ச்சிக்கு ஏகோபித்த வரவேற்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

'வெற்றியின் ரகசியம்' அறிய ஆர்வத்துடன் குவிந்த மாணவர்கள்: 'காலைக்கதிர்' நிகழ்ச்சிக்கு ஏகோபித்த வரவேற்பு

Added : டிச 01, 2019

தர்மபுரி: தர்மபுரியில், 'காலைக்கதிர்' நாளிதழ் நடத்திய, 'வெற்றியின் ரகசியம், ஜெயிப்பது நிஜம் 2.0' நிகழ்ச்சியில், அலைகடலென மாணவ, மாணவியர் திரண்டு வந்து, புதிய பாடத்திட்டத்தில் சாதிக்கும் வெற்றியின் ரகசியத்தை அறித்து கொண்டதுடன், புது உத்வேகம் பெற்றனர்.
'காலைக்கதிர்' நாளிதழ், மாணவ, மாணவியரின் நலனில் அக்கறையோடு, 'கல்வி வழிகாட்டி, உங்களால் முடியும், ஜெயிப்பது நிஜம்' உள்ளிட்ட கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வரிசையில், மாணவர்களின் வாழ்வில் முக்கிய திருப்பு முனையாக உள்ள பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வை எளிதாக எதிர்கொள்ள, புதிய பாடத்திட்டத்தை அணுகும் முறை குறித்த விளக்கம் பெற்று, சாதனையாளராக மாற, தன்னம்பிக்கையூட்டும் நிகழ்ச்சியாக, 'வெற்றியின் ரகசியம், ஜெயிப்பது நிஜம் 2.0' அமைந்துள்ளது. அமிர்தா விஸ்வ வித்யா பீடம் நிறுவனத்துடன், காலைக்கதிர் நாளிதழ் இணைந்து, தர்மபுரி பென்னாகரம் சாலையில் உள்ள செங்குந்தர் திருமண மண்டபத்தில் நேற்று நடந்த இந்நிகழ்ச்சிக்கு, காலை, 8:20 மணி முதல் மாணவர்கள் ஆர்வத்துடன் வரத்தொடங்கினர். இவர்களுக்கு, ஊக்கம் தர பெற்றோரும், ஆசிரியர்களும் உடன் வந்திருந்தனர். மண்டபம் நிறைந்ததால், பல மாணவர்கள் மேடையில் அமர்ந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு முதலில் வந்த மாணவி கார்த்திகா, அமிர்தா பல்கலைக்கழக பேராசிரியர் காந்திராஜ், தர்மபுரி அதியமான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் வாசுதேவன், மனநலம் மற்றும் உடல் நல ஆலோசகர் அமுல்ராஜ், 'காலைக்கதிர்' பொதுமேலாளர் ஜெரால்டு ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். இதில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு முக்கிய வினாக்கள், குறிப்புகள் அடங்கிய புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது. பென்னாகரம் விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி ஸ்ரீவிஜய்வித்யாலயா பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோபிநாதம்பட்டி கூட்டுரோடு இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, இட்லம்பட்டி சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கம்பைநல்லூர் அம்ருதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தர்மபுரி அவ்வையார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜருகு, பென்னாகரம், பி.அக்ரஹாரம், இண்டூர், பாலக்கோடு, காரிமங்கலம், பெரியாம்பட்டி, நல்லம்பள்ளி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட, பல்வேறு அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். மாணவர்களுக்கு, கம்பைநல்லூர் ஸ்ரீராம் கல்வி நிறுவனங்கள் மற்றும் பெரியாம்பட்டி சக்தி கைலாஷ் கலைக்கல்லூரி நிர்வாகத்தினர், வாகன வசதி செய்து கொடுத்தனர்.

'மனப்பாடம் வேண்டாம்: சொந்த நடை நல்லது': புதிய பாடத்திட்டம் குறித்து, தர்மபுரி, அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் வாசுதேவன் பேசியதாவது: புதிய பாடத்திட்டம், ஒன்றரை ஆண்டுகளாக ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஓய்வு பெற்ற அதிகாரிகள் குழுக்கள் மூலம் தயாரிக்கப்பட்டதாகும். புதிய பாடத்திட்டம் குறித்து மாணவர்களுக்கு மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் கூட அச்சம் நிலவுகிறது. புதிய பாடத்திட்டங்களை, ஆசிரியர்கள் வழி காட்டுதலுடன், மாணவர்களும் ஏகலவைன் போல், நீங்களே உங்களுக்கு ஆசிரியர்களாக இருந்து, ஸ்மார்ட் போன்கள் மூலம், 'க்யூ-ஆர்' கோடுகளை பதிவு செய்து பாடங்களை படிக்க முடியும். நீட் தேர்வில் ஸ்டேட் போர்டு பாட பிரிவுகளில் இருந்து, குறைந்த மதிப்பெண்களுக்கு தான் கடந்த காலங்களில் கேள்விகள் வந்தன. ஆனால், நடப்பாண்டு நீட் தேர்வில் புதிய பாடத்திட்டத்தில் இருந்து, 38 வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. உலக தரத்துக்குள்ள புதிய பாடத்திட்டத்தை, ஆசிரியர்கள் குறை கூறாமல், மாணவர்களுக்கு எடுத்து செல்ல வேண்டும். மாணவர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். பாட புத்தகங்களில் உள்ள பாட சுருக்கத்தையும், பாடங்களையும் புரிந்து படிப்பதன் மூலம், பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறலாம். மாணவர்கள் மனம் சோர்வடையாமல் இருக்க, மூச்சு பயிற்சியில் ஈடுபடுவதன் மூலம் பாடங்களை ஒரு நிலையில் படிக்க முடியும். பாடங்களை மனப்பாடம் செய்யாமல் படித்து, தங்களது சொந்த நடையில் எழுதி, படிப்பது சிறந்தது. கேள்விகளுக்கு மாணவர்கள் பெரிதாக விடை எழுதாமல், தேவையான அளவு மட்டும் எழுத வேண்டும். இதன் மூலம், தேர்வில் உங்களுக்கு விடை எழுத போதிய நேரம் கிடைக்கும். திறமையுடன், பயிற்சியும் இருந்தால் நீங்களும் சாதனையாளராக மாற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

'தரமான கல்விக்கு அமிர்தா பல்கலை': அமிர்தா பல்கலைக்கழக பேராசிரியர் காந்திராஜ் பேசியதாவது: இந்தியாவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில், 85 முதல், 90 சதவீதம் பட்டதாரிகள், வேலைக்கு தகுதியில்லாதவர்கள் என, தெரிவித்துள்ளது. எனவே, மாணவர்கள் படிக்கும் போது, பாடங்களை புரிந்து படித்து, தங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். கல்வி முறையில் வாழ்க்கை கல்வி, தொழில் கல்வி என இரண்டு உள்ளது. வாழ்க்கை கல்வியை பெற்றோர், உறவினர், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் கற்றுக்கொள்ளலாம். இக்கல்வி முறை தொழில் கல்விக்கு உதவாது. தொழில்கல்வியில், கலை அறிவியல், இன்ஜினியரிங் பாடங்களை படிக்கும் போது புரிந்து படித்தால் மட்டுமே, வேலை கிடைக்கும். அந்த வகையில் மாணவர்களுக்கு புரிதலுடன் கூடிய கல்வியை அமிர்தா பல்கலைக்கழகம் வழங்கி வருகிறது. இதனால்தான், இந்திய அளவில் சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில், எங்களது அமிர்தா பல்கலைக்கழகம், எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. மீதமுள்ள, ஏழு இடங்களை அரசின் ஐ.ஐ.டி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மட்டும் பெற்றுள்ளன. எங்கள் பல்கலையில் படிக்கும் மாணவர்களுக்கு, தகுதியான ஆசிரியர்கள் மூலம் கல்வியை குறைவின்றி வழங்கி வருகிறோம். இதன் மூலம், மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர். எனவே, மாணவர்கள் நல்ல கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பெற, அமிர்தா பல்கலைக்கழகம் சிறந்ததாக உள்ளது. நன்றாக படித்து, வேலைவாய்ப்பு மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் சாதிப்பதன் மூலம், நம்நாட்டையும் சிறந்த வளர்ச்சி அடைந்த நாடாக மாற்ற முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

' உங்கள் திறமையை கண்டுபிடிக்கவே தேர்வு': மனநலம் மற்றும் உடல் நல ஆலோசகர் அமுல்ராஜ் பேசியதாவது: வாழ்க்கையில் எப்போதும், நேர்மறையாக இருக்க வேண்டும். எதிர்மறைகளை தடுக்க வேண்டும். உதாரணமாக குப்பையில், இரண்டு மாங்கொட்டைகள் வீசப்பட்டன. அதில், ஒரு மா விதை குப்பையில் விழுந்து விட்டோமே; என் வாழ்வு இது, மழை பெய்தால் குப்பையுடன் மக்கி மண்ணாகிவிடலாம் என எதிர்மறையாக நினைத்தது. மற்றொரு மா விதை மழை பெய்தால், இக்குப்பையில் இருந்து முளைத்து, மரமாகி மக்களுக்கு நல்ல கனிகளை தரலாம் என நேர்மறையாக நினைத்தது. மழை வந்தது, ஒரு மா விதை தான் எண்ணப்படி, மண்ணோடு, மண்ணாக மக்கியது. மற்றொன்று, குப்பையில் இருந்து வளர்ந்ததுடன், ஒரு வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டு நன்கு வளர்க்கப்பட்டது, கனி கொடுத்தது. எனவே, நாம் படிக்கும் போது மட்டுமின்றி, அனைத்து நேரங்களிலும், நேர்மறையாக மட்டும் சிந்தித்தால் வாழ்வில் நல்ல இடத்துக்கு செல்ல முடியும். வாழ்வில் பயம் என்பது இருக்கக்கூடாது. பயத்துக்கான காரணத்தை கண்டுபிடித்து அகற்ற வேண்டும். சந்தேகங்களை, ஆசிரியர்களிடம் கேட்டு தெளிவு பெறுங்கள். தேர்வு என்பது, நீங்கள் தோல்வியாளர் என, அறிவிக்க இல்லை. உங்கள் திறமையை கண்டுபிடிப்பதற்கான ஒன்று தான். மனதில் ஒரு சின்ன மாற்றம் இருந்தால் எளிதில் ஜெயிக்க முடியும். நாளை என்பதை ஒதுக்கி வைத்து, உங்களது பணிகளை அன்றே செய்யுங்கள். மற்றவர்களை, உங்களுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். படிப்பதற்கான நேரத்தை ஒதுக்குங்கள், நன்றாக தூங்குங்கள், சாப்பிடுங்கள். இதன் மூலம் நீங்கள் புத்துணர்ச்சியுடன் படிக்க முடியும். பாடங்களை படிக்கும் போதும், தேர்வு எழுதும் போதும் பதற்ற மடையாமலும், மனப்பாடம் செய்யாமலும் புரிந்து படிக்க வேண்டும். தேர்வின் போது, முதலில் தெரிந்த கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும். நேர்மறையான எண்ணம், மனதை ஒருங்கிணைப்பது, புரிந்து படிப்பதன் மூலம் அனைத்து மாணவர்களும் தேர்வில் வெற்றி பெறலாம். இவ்வாறு அவர் பேசினார்.

மாணவர்கள் கருத்து

எம்.சிவப்பிரியா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பெரியாம்பட்டி: எந்த ஒரு நிகழ்வையும், பாசிட்டிவாக நினைக்க வேண்டும். உயர்ந்த சிந்தனையை நினைத்தால்தான், அந்த காரியத்தில் எளிதில் வெற்றி பெற முடியும், உயர்வடைய முடியும் என்ற ரகசியத்தை அறிந்து கொண்டேன். என் போன்ற மாணவியருக்கு இந்நிகழ்ச்சி புத்துணர்ச்சியை அளிக்கிறது. இதன் மூலம் தேர்வில், அதிக மதிப்பெண் பெறும் அளவிற்கு ஆற்றலும், உத்வேகமும் எங்களுக்கு கிடைத்துள்ளது.


சி.கவிப்பிரியா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பாலக்கோடு: மாணவ, மாணவியருக்கு தேர்வில் சாதிக்க ஊக்கமளிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த காலைக்கதிர் நாளிதழுக்கு நன்றி. தேர்வில் என்ன தவறு செய்கிறோம். அதை செய்யாமல் இருக்க வழிகள் என்ன, அதிக மதிப்பெண் பெறும் வழிமுறைகள் உள்பட பல்வேறு மாணவர்கள் கற்கும் பண்புகளை வளர்த்துக் கொள்ள படக்காட்சிகள் மூலம் செயல் விளக்கம் அளித்தது பயனுள்ளதாக இருந்தது. அத்துடன், 'டென்ஷன்' இல்லாமல் பாடங்கள் படிப்பதை அறிந்து கொண்டேன்.


ஆர்.பரத், அரசு மேல்நிலைப்பள்ளி, ஜருகு: வெற்றியின் ரகசியம் நிகழ்ச்சியில் பங்கேற்றதால், தேர்வு பயம் முழுவதும் நீங்கியது. தேர்வை எளிதில் சந்திக்க முடியும் நம்பிக்கை வந்துள்ளது. அரசு பள்ளியில் படிக்கும் நாங்கள், இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது பெருமையாக கருதுகிறேன். எனக்கும், எங்கள் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமைந்தது. நாங்கள் அனைவரும், 100 சதவீத மதிப்பெண் பெறுவோம் என்ற நம்பிக்கை வந்துள்ளது.


கா.மவுரியா, விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பென்னாகரம்: படக்காட்சிகள் மூலம், வெற்றியின் ரகசியங்களை அறிந்து கொண்டோம். பாடங்களை புரிந்து படிப்பதன் அவசியம், நேர்மறை சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும் உள்பட ஏராளமான ஆலோசனைகள் பயனுள்ளதாக இருந்தது. மாணவர்களின் வெற்றிக்கு காலைக்கதிர் உதவுகிறது.

பெற்றோர் பேட்டி

கே.முனியம்மாள், நாயக்கன்கொட்டாய்: என் குழந்தைகள் இருவர் முறையே, 10 மற்றும் பிளஸ் 2 படிக்கின்றனர். அவர்கள் படிக்கும் பள்ளியில் சிறப்பு வகுப்பு நடப்பதால், அவர்களால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க முடியவில்லை. அவர்களுக்காக, நான் இதில் பங்கேற்க வந்தேன். இங்கு கூறப்பட்ட வெற்றியின் ரகசியங்கள், தன்னம்பிக்கை ஊட்டும் முறைகளை அறிந்து கொண்டேன். இதை, என் குழந்தைகளுக்கு தெரிவித்து, தேர்வில் அதிக மதிப்பெண் பெறச்செய்வேன். காலைக்கதிர் நாளிதழுக்கு நன்றி.

வி.சஞ்சய்முருகன், பாப்பாரப்பட்டி: பாடங்களை எளிமையாக புரிந்து கொண்டு படித்தல், இரவு நேரங்களில் அதிக நேரம் கண் விழித்து படித்தலை தவிர்த்தல். எந்த பாடத்தை படித்தாலும், முழு அர்ப்பணிப்புடன் படிக்கும் முறைகள், அதில் வெற்றி பெறுவதற்கான வழிகளை அறிந்து கொண்டோம். எனது மகளுடன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றேன். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியருக்கு தேர்வு பயம் நீங்கியதாக கருதுகிறேன்.

ஆசிரியர் சரவணன், விநாயகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பென்னாகரம்: தேர்வை பயமில்லாமல் எதிர்கொள்வது எப்படி, தன்னம்பிக்கை ஊட்டுதல், சிறுகதை, வீடியோ படக்காட்சிகளுடன் செயல்முறை காண்பித்து பாடங்களை எளிதில் கற்கும் முறைகளை விளக்கி கூறியது மாணவர்கள் மட்டுமின்றி, ஆசிரியர்களுக்கும் பயனுள்ளதாக இருந்தது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X