ஓசூர்: ஓசூர் அடுத்த சானமாவு அருகே கடந்த, 11ல், லாரியை மோத செய்து, கார் மீது பெட்ரோல் குண்டு வீசியதில், கெலமங்கலம் அடுத்த எச்.செட்டிப்பள்ளியை சேர்ந்த கார் டிரைவர் முரளி, ஓசூர் மகாலட்சுமி நகரை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த்பாபு மனைவி நீலிம்மா ஆகிய இருவர் பலியாகினர்.உத்தனப்பள்ளி போலீசார் விசாரணையில், தொழில்போட்டி காரணமாக, விபத்து போல் செட்டப் செய்து, மதுரை கூலிப்படை உதவியுடன், ஆனந்த்பாபுவின் அக்கா கணவர் ராமமூர்த்தி, கொலை சம்பவத்தை அரங்கேற்றியது தெரிந்தது. கொலை தொடர்பாக, மகராஜன், ஆனந்தன், சாந்தகுமார், லாரி உரிமையாளர் நீலமேகம், அசோக் கைது செய்யப்பட்டனர். மதுரையை சேர்ந்த வக்கீல் வெங்கட்ராமன், சேலம் ஜே.எம்., 2 நீதிமன்றத்திலும், ராமகிருஷ்ணன், அம்பலவாணன் ஆகியோர், தேனி மாவட்டம், பெரியகுளம் நீதிமன்றத்திலும் சரணடைந்தனர். இந்நிலையில், கொலை தொடர்பாக, ஓசூர் அடுத்த கோபசந்திரத்தை சேர்ந்த ராமு, 21, மஞ்சுநாத், 32, மற்றும் கோபால், 40, ஆகிய மூன்று பேரை போலீசார் நேற்று கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைந்தனர். இரட்டை கொலை வழக்கில் இதுவரை, 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மூன்று பேர் சரணடைந்துள்ளனர். தலைமறைவாக உள்ள தொழிலதிபர் ராமமூர்த்தி மற்றும் பாலாஜி, முருகேசன் ஆகிய மூன்று பேரை தேடி வருகின்றனர்.