ஆத்தூர் குடோனில் ரூ.27.59 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: ராஜஸ்தானை சேர்ந்த சகோதரர்கள் கைது: 2 பேர் தலைமறைவு| Dinamalar

தமிழ்நாடு

ஆத்தூர் குடோனில் ரூ.27.59 லட்சம் மதிப்புள்ள குட்கா பறிமுதல்: ராஜஸ்தானை சேர்ந்த சகோதரர்கள் கைது: 2 பேர் தலைமறைவு

Added : டிச 01, 2019

ஆத்தூர்: வீரகனூரில், அ.தி.மு.க., பிரமுகரின் விவசாய தோட்டத்தில் உள்ள குடோனில், பதுக்கி வைத்திருந்த, 27.59 லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா, மினி லாரி, கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், ராஜஸ்தானை சேர்ந்த சகோதரர்களை கைது செய்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, வீரகனூர், ராயர்பாளையம் பகுதியை சேர்ந்தவர், அ.தி.மு.க., முன்னாள் மாவட்ட பிரதிநிதி குமாரசாமி, 45. இவரது, விவசாய தோட்டத்தில் உள்ள குடோனில், நேற்று முன்தினம் இரவு, ஆத்தூர் டி.எஸ்.பி., ராஜூ தலைமையிலான போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, 27.59 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 113 மூட்டை ஹான்ஸ், 70 பெட்டிகளில் இருந்த பான்மசாலா, 35 பெட்டிகளில் இருந்த தலா, ஐந்து கிராம் வெள்ளி வீதம், 52 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, 175 கிராம் வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய, ஈச்சர் மினி லாரி மற்றும் மாருதி கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து, வீரகனூர் போலீசார், ராஜஸ்தான் மாநிலம், ஜலார் மாவட்டம், பாப்கரா பகுதியை சேர்ந்த, சொக்கராம் மகன்கள் ஜமத்தூராம், 34, அவரது தம்பி அஜராம், 26, கிருஷ்ணகிரியை சேர்ந்த, மினி லாரி டிரைவர் வேலு, செந்தில்குமார் ஆகிய நான்கு பேர் மீது, ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதில், சகோதரர்களான ஜமத்தூராம், அஜாராம் ஆகியோரை கைது செய்தனர். மற்ற இருவரையும், இன்ஸ்பெக்டர்கள் ஆத்தூர் டவுன் உமாசங்கர், வீரகனூர் ராம்ஆண்டவர் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து, தேடிவருகின்றனர். இடத்தின் உரிமையாளரான அ.தி.மு.க., பிரமுகர் குமாரசாமியிடம், குட்கா பதுக்கி வைக்க குடோன் வாடகைக்கு விடப்பட்டது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: ராஜஸ்தானை சேர்ந்த சகோதரர்கள், கடந்த செப்டம்பர் முதல், ஆத்தூர், வீரகனூர் பகுதியில் இருந்து, குட்கா விற்பனை செய்ய இடம் தேடியுள்ளனர். வீரகனூரில், விவசாய தோட்டத்தில் உள்ள குடோனில் மளிகை பொருட்கள் வைக்க இடம் வேண்டும் என, மாதம், 3,000 ரூபாய்க்கு வாடகை பேசியுள்ளனர். இங்கு பதுக்கி வைத்திருந்த குட்காவை, ஆத்தூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் விற்பனை செய்துள்ளனர். பெங்களூரு, யஷ்வந்த்பூர் பகுதியில் இருந்து குட்கா கொள்முதல் செய்து, தமிழக குட்கா வியாபாரிகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினர்.

சிக்கப் போகும் உள்ளூர் போலீசார்: வீரகனூரை சேர்ந்த ஒருவர், ராயர்பாளையம் தனியார் பள்ளி பின்புறம் உள்ள விவசாய தோட்டத்தில் குட்கா பதுக்கி வைப்பதாகவும், தற்போது லாரியில் இருந்து குட்கா இறக்கி வருவது குறித்து, வீரகனூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர்கள், அலட்சியமாக இருந்ததால், சேலம் எஸ்.பி., தீபாகானிகேருக்கு, அவர் புகார் தெரிவித்துள்ளார். அதன்பின், போலீசார் ஆய்வு செய்தபோது, பல லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. குட்கா பொருட்களை குறைவாக, 'கணக்கு' காட்ட போலீசார் முயற்சி செய்வதாக புகார் எழுந்ததால், எஸ்.பி., அனைத்து பொருளையும் பறிமுதல் செய்யும்படி உத்தரவிட்டார். உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், ஆய்வுக்கு பின், பல லட்சம் குட்கா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உள்ளூர் போலீசாருக்கு, 'கவனிப்பு' கொடுத்துவிட்டு, இத்தொழில் நடந்து வந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேர்மையாக விசாரணை நடத்தினால், உள்ளூர் போலீசார் இந்த விவகாரத்தில் விரைவில் சிக்குவர் என, வருவாய்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X