குடியாத்தம்: குடியாத்தம் அருகே, ஐந்து ஏக்கர் நிலத்தை அழித்து யானைகள் அட்டகாசம் செய்தன. வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த மோர்த்தானாவில் நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு ஐந்து யானைகள் புகுந்து, அங்கிருந்த பயிர்களை நாசம் செய்தன. விரட்ட வந்தவர்களை யானை துரத்தியது. இதனால் அருண்சிங், 34, கமலக்கண்ணியம்மாள், 65, லட்சுமிபாய், 46, சுப்பிரமணியன், 56, திவாகரன், 45, ஆகியோருக்கு சொந்தமான, ஐந்து ஏக்கர் நிலத்தில் இருந்த நெல், கம்பு, சாமை, வாழை பயிர்கள் நாசமாகின. குடியாத்தம் வனத் துறையினர் நேற்று பட்டாசுகள் வெடித்தும், தீப்பந்தம் காண்பித்தும் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், 'தமிழக-ஆந்திர மாநில எல்லையில் உள்ள இப்பகுதியில், நூற்றுக்கணக்கான யானைகள் உள்ளன. உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் ஊருக்குள் வந்து அட்டகாசம் செய்கின்றன. எனவே, இப்பகுதியில் யானைகள் சரணாலயம் அமைத்தால் பிரச்னை தீரும்' என்றனர்.