குளித்தலை: தோகைமலையில், மனநல காப்பகத்தில் சிகிச்சையளிக்கப்பட்டு, குணமடைந்த பட்டதாரி வாலிபர் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
குளித்தலை அடுத்த, தோகைமலை கடைவீதியில் சில மாதங்களுக்கு முன், 35 வயது மதிக்கத்தக்க மனநிலை பாதிக்கப்பட்ட வாலிபர் சுற்றித்திரிந்தார். தகவலறிந்து வந்த, சாந்திவனம் மனநல காப்பக மேலாளர் பாபு, ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன் ஆகியோர் வாலிபரை மீட்டனர். மூன்று மாத சிகிச்சைக்கு பிறகு அவர் குணமடைந்தார். அவரிடம் மருத்துவ குழுவினர் விசாரித்த போது, திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகா, அக்ராபாளையத்தைச் சேர்ந்தவர் என்பதும், பெற்றோர் இறந்துவிட்ட நிலையில், சகோதரி அவரை பராமரித்து வந்ததும் தெரிந்தது. மேலும், அவர் பெயர் ராமலிங்கம், நான் பி.எஸ்சி., படித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து, அவரை, அவரது சகோதரி குடும்பத்திடம் குடும்பத்தினரிடம் சாந்திவனம் காப்பகத்தினர் ஒப்படைத்தனர்.