குளித்தலை: 'பஞ்சப்பட்டி குளத்திற்கு காவிரியில் இருந்து உபரி நீரை கொண்டு வர வேண்டும்' என, முன்னாள் அமைச்சர், தற்போதைய அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார்.
குளித்தலை அடுத்த, பஞ்சப்பட்டி குளம் மூலமாக, 25 பஞ்சாயத்து விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கிறது. அதிகளவு மழைநீர் வரும்போது திருச்சி மாவட்டம், கடைமடைப் பகுதியில் உள்ள விவசாய நிலம் மற்றும் 10க்கும் மேற்பட்ட குளங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த குளத்தை நம்பியுள்ள பகுதி, மழை இல்லாத காலங்களில் வானம் பார்த்த பூமியாக உள்ளது. 'இந்த குளத்திற்கு காவிரியில் உபரியாக கடலில் கலக்கும் தண்ணீரை, மாயனூரில் இருந்து கொண்டு வர வேண்டும்' என, பகுதி மக்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். ஆர்ப்பாட்டமும் நடந்துள்ளது. இந்நிலையில், நேற்று, பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்க வந்த, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம், 'பஞ்சப்பட்டி குளத்திற்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டும்' என, முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம், கோரிக்கை விடுத்தார். அப்போது, அமைச்சர் பேசியதாவது: மாவட்டத்தில் உள்ள குளங்கள், குடிமராமத்து திட்டத்தின் கீழ் தூர்வாரப்பட்டன. மேலும், மிகவும் முக்கியமான குளங்களை முன்கூட்டியே தமிழக முதல்வரிடம் மனுவாக கொடுத்துள்ளேன். பஞ்சப்பட்டி குளத்திற்கு தண்ணீர் கொண்டுவருவது குறித்து, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE