புதுடில்லி: லோக்பால் அமைப்பின் அலுவலகம், டில்லி அசோகா ஓட்டலில், மாதம், 50 லட்சம் ரூபாய் வாடகையில் செயல்பட்டு வருவது, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.
முன்னாள் பிரதமர் உட்பட, அனைத்து அரசு அமைப்பு அதிகாரிகளின் லஞ்ச ஊழல் வழக்குகளை விசாரிக்கும் அதிகாரமிக்க அமைப்பு, லோக்பால். இதன் முதல் தலைவராக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி, பி.சி.கோஸ், இந்தாண்டு மார்ச்சில் நியமிக்கப்பட்டார். அத்துடன், மேலும், எட்டு உறுப்பினர்களை மத்திய அரசு நியமித்தது. இதையடுத்து, லோக்பால் அலுவலகம், டில்லியின், ஐந்து நட்சத்திர ஓட்டலான அசோகாவில், செயல்படத் துவங்கியது. இந்நிலையில், சமூக ஆர்வலரான, சுபம் கத்ரி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில், லோக்பால் அலுவலகத்திற்கு மாதம், 50 லட்சம் ரூபாய் வாடகை வழங்குவதாக தெரியவந்துள்ளது.
இது குறித்து, சுபம் கத்ரி கூறியதாவது:அசோகா ஓட்டலில், 12 அறைகளில் இயங்கும் லோக்பால் அலுவலகத்திற்கு, மாதம், 50 லட்சம் ரூபாய் வீதம், மார்ச் - அக்., வரை, 3.85 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதே காலத்தில், அரசு ஊழியர்கள் மீது, 1,160 ஊழல் புகார்கள் வந்துள்ளன. அவற்றில், 1,000 புகார்கள் மீது, லோக்பால் குழு முதற்கட்ட ஆய்வு நடத்தியுள்ளது. லோக்பால் செயல்படத் துவங்கி ஏழு மாதங்கள் ஆகியும், இன்னும் ஒரு புகார் குறித்தும் முழு விசாரணை நடத்தப்படவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளதுஇவ்வாறு, அவர் கூறினார். இதனிடையே, லோக்பால் அமைப்புக்கு, நிரந்தர இடத்தை தேர்வு செய்து விட்டதாகவும், விரைவில், அங்கு அலுவலகம் மாற்றப்படும் என்றும், பி.சி.கோஸ் தெரிவித்துள்ளார்.