சென்னை: பொதுப்பணித் துறையில் பதவி உயர்வு பெற்ற செயற்பொறியாளர்கள், இன்று காலை கட்டாயம் பொறுப்பேற்க, உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுப்பணித் துறையில் கட்டடங்கள், நீர்வளத் துறை உள்ளிட்ட பிரிவுகள் உள்ளன. இவற்றில், 102 செயற்பொறியாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன. இதையடுத்து, உதவி செயற்பொறியாளர்கள், 98 பேருக்கு, பதவி உயர்வு வழங்கப்பட்டு, சமீபத்தில் பல இடங்களில் நியமனம் செய்யப்பட்டனர். ஏற்கனவே, பல இடங்களில் பணியாற்றிய செயற்பொறியாளர்கள், வேறு இடங்களுக்கு மாற்றம் செய்யப்பட்டனர். புதிதாக நியமிக்கப் பட்டோர், இட மாற்றம் செய்யப்பட்டோர், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில், இன்னும் பொறுப்பேற்கவில்லை. மாவட்டம் விட்டு மாவட்டம், இடம் மாற்றப் பட்டதால், குடும்பத்துடன் இடம் பெயரலாமா அல்லது தனியாக செல்லலாமா என்ற எண்ணத்தில் காத்திருக்கின்றனர். வட கிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால், நீர்நிலைகளையும், அரசு கட்டடங்களையும் கண்காணிக்க வேண்டிஉள்ளது.
எனவே, அந்த அதிகாரிகள், இன்று காலை, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியிடங்களில் பொறுப்பேற்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை, நீர்வளத்துறை முதன்மை தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கட்டடங்கள் பிரிவின் முதன்மை தலைமை பொறியாளர் ராஜா மோகன் பிறப்பித்து உள்ளனர்.