தாக்குப் பிடிக்குமா தாக்கரே அரசு? மஹா.,வில் மலை போல பிரச்னைகள்

Updated : டிச 03, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (21)
Share
Advertisement
மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்குப் பிறகு நடந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தில், 'முதல்வர் பதவி வேண்டும்' என, சிவசேனா பிடிவாதமாக இருந்தது; அதில் வெற்றியும் பெற்றுள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகி உள்ளார். அரசியலில் நீண்ட காலம் இருந்தாலும், ஆட்சி நிர்வாகம் என்பது உத்தவ் தாக்கரேவுக்கு புதிது. பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில், அரசியல்,
Maharastra, தாக்கரே, சிவசேனா, தாக்குபிடிக்குமா, பயிர் கடன் தள்ளுபடி, வெளிநாட்டு கடன், பிரச்னை

மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலுக்குப் பிறகு நடந்த அரசியல் சதுரங்க ஆட்டத்தில், 'முதல்வர் பதவி வேண்டும்' என, சிவசேனா பிடிவாதமாக இருந்தது; அதில் வெற்றியும் பெற்றுள்ளது. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராகி உள்ளார்.

அரசியலில் நீண்ட காலம் இருந்தாலும், ஆட்சி நிர்வாகம் என்பது உத்தவ் தாக்கரேவுக்கு புதிது. பல்வேறு கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில், அரசியல், பொருளாதாரம், மாநில வளர்ச்சி என, பல முனைகளில், பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டிய நிலையில்,உத்தவ் தாக்கரே உள்ளார். கூட்டணி கட்சிகளையும் சமாளித்து, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

தற்போதைய சூழ்நிலையில், அவருக்கு முன் பல சவால்கள் உள்ளன. அடுத்து வரும் காலத்தில், இந்த சவால்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கும். சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபித்துள்ள உத்தவ் தாக்கரே, உடனடியாக சந்திக்க உள்ள சில முக்கியமான பிரச்னைகள்:


பல கட்சி கூட்டணி:


காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்., ஆகியவை, இந்த புதிய கூட்டணியில் உள்ள மிகப் பெரிய கட்சிகள். அதைத் தவிர, குட்டி குட்டி கட்சிகளும் இதில் உள்ளன. கூட்டணி கட்சிகளை அனுசரித்து, அவற்றின் கொள்கைகளுக்கு வளைந்து கொடுத்து, அமைச்சரவையில் உள்ள மற்ற கட்சியினரை சமாளித்து, ஆட்சி நடத்த வேண்டும் என்ற சாகசத்தை செய்ய வேண்டியுள்ளது.


மெட்ரோ ரயில் திட்டம்:


மும்பையின் நுரையீரலாகக் கருதப்படும், ஆரே காலனியில், மெட்ரோ ரயில் பணிமனை அமைக்கும் திட்டத்துக்கு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அங்குள்ள, ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள், பல வகை பறவைகள், உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. இந்த திட்டம் மறுஆய்வு செய்யப்படும் என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். என்ன செய்யப் போகிறார் என்று, பா.ஜ.,வினர் நமட்டு சிரிப்புடன் காத்திருக்கின்றனர்.


அனுபவமின்மை:


மஹாராஷ்டிராவில், சிவசேனாவின் சார்பில் மனோகர் ஜோஷி, நாராயண் ரானே ஆகியோர் முதல்வராக இருந்துள்ளனர்.அந்த வரிசையில், அந்தக் கட்சியின் மூன்றாவது முதல்வராக உத்தவ் உள்ளார். ஆனால், மற்ற இருவருக்கும் நிர்வாக அனுபவம் முன்பே இருந்தது. உத்தவ் தாக்கரேவுக்கு இது தான் கன்னி வாய்ப்பு.


நிதி நிலை:கடந்த ஐந்து ஆண்டுகளில், மாநிலத்தின் வரி வருவாய் உள்ளிட்ட வருவாய் இனங்களில் பெரிய சரிவு ஏற்பட்டது.பெரும்பாலான திட்டங்கள், வெளிநாட்டு கடன்களால் செயல்படுத்தப்படுகின்றன. மாநிலத்தின் தற்போதைய மொத்தக் கடன், 4.85 லட்சம் கோடி. இதற்கு மேல் கடன் வாங்கினால் ஆபத்து என்ற நிலையில், நிதி நிலைமையை எப்படி சமாளிப்பது என்பது மிகப் பெரிய சவால். இதில், விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட உறுதிகளையும் வெளியிட்டுள்ளார்.


அமைச்சரவை விரிவு:


சிவசேனா, காங்., மற்றும் தேசியவாத காங்., ஆகியவை தலா, 15 அமைச்சர்களை பகிர்ந்து கொள்வது என்று முடிவு செய்துள்ளன. அதனால், அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்த பலருக்கு ஏமாற்றம் ஏற்படும். அவர்களை எப்படி தாஜா செய்யப் போகிறார் என்பது, கூட்டணி அரசு எதிர்நோக்கியுள்ள பெரிய சவால்.


விவசாயிகளுக்கு இழப்பீடு:


பருவம் தவறிய மழையால், மாநிலத்தில், 92 லட்சம் ஹெக்டேர் விளைநிலம் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில வேளாண் துறை கூறியுள்ளது. குறைந்தபட்ச பொது செயல் திட்டத்தில், விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.ஒரு ஹெக்டேருக்கு, 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு அளித்தால், 2,300 கோடி ரூபாய் தேவை. சட்டியிலேயே இல்லை, அகப்பையில் எப்படி வரும்.


விவசாய கடன் தள்ளுபடி:


மற்றொரு குறைந்தபட்ச பொதுச் செயல் திட்ட உறுதிமொழி, விவசாயிகளின் பயிர் கடன் தள்ளுபடி. மாநிலத்தில் உள்ள, 1.33 கோடி விவசாயிகளுக்கான பயிர் கடனை ரத்து செய்ய, 1 லட்சம் கோடி ரூபாய் தேவை. மாநிலத்தின் கடன் பளு, 4.85 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும்போது, இதை செயல்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுகிறது.


புல்லட் ரயில்:


பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம், ஆமதாபாத் - மும்பை புல்லட் ரயில் திட்டம். மொத்தம், 1.08 லட்சம் கோடி ரூபாயிலான இந்த திட்டத்துக்கு, மஹா., அரசு, 40 ஆயிரம் கோடி ரூபாய் தர வேண்டும். காங்., - தேசியவாத காங்., எதிர்ப்பை மீறி, பா.ஜ.,வைச் சேர்ந்த பிரதமருடன் இணக்கமாகச் செயல்பட்டு, இந்த திட்டத்தை உத்தவ் செயல்படுத்துவாரா என்பது மிகப் பெரிய கேள்வியாக உள்ளது.


மும்பை கடலோர சாலை:


உத்தவ் தாக்கரேவின் அரசியல் பொறுமையை சோதிக்கும் மற்றொரு திட்டம், மும்பை கடலோர சாலை திட்டம். தெற்கு மும்பையில் இருந்து, வடக்கு மும்பையை இணைக்கும் வகையில், கடலோரத்தில் அமைய உள்ளது இந்த சாலை. இதற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் ஒப்புதல் தேவை. இதை எப்படி செயல்படுத்தப் போகிறது புதிய அரசு என்பதும்மக்களின் எதிர்பார்ப்பு.


சலுகை விலை சாப்பாடு:


தன் தேர்தல் அறிக்கையில், '10 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும்' என, சிவசேனா கூறியுள்ளது; அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என, மக்கள் காத்திருக்கின்றனர்.


பா.ஜ., விமர்சனம்:


பா.ஜ., உடனான கூட்டணியை, சிவசேனா முறித்து கொண்டுள்ளது. 'ஹிந்துத்துவா கொள்கையை சிவசேனா கைவிட்டுவிட்டது' என, பா.ஜ., ஏற்கனவே விமர்சித்துள்ளது. சட்டசபையில் தனிப்பெரும் கட்சியாக உள்ளதால், பா.ஜ.,வின் விமர்சனம் இனி அதிகமாகவே இருக்கும்.


பெயர் மாற்றம்:


சிவசேனாவின் முந்தைய ஆட்சியின்போது, அவுரங்காபாத், ஓஸ்மனாபாத் மாவட்டங்களின் பெயர் மாற்றப்பட்டது. ஆனால், அதன்பிறகு வந்த காங்., - தேசியவாத காங்., ஆட்சியின்போது, பழைய பெயர்களே மீண்டும் வைக்கப்பட்டன. தற்போது, கூட்டணிகட்சிகளின் எதிர்ப்பை மீறி, பெயர் மாற்றத்தில் உத்தவ் அரசு ஈடுபடுமா என்ற கேள்வியும் எழுகிறது.


நினைவிடங்கள் செலவு:


சத்ரபதி சிவாஜி, அம்பேத்கர் நினைவிடங்கள் கட்டுவதற்கான நிதியை திரட்ட வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு, உத்தவ்தாக்கரே தலையில் விழுந்துள்ளது. மாநகராட்சி தேர்தல்: பிருஹன் மும்பை மாநகராட்சி தேர்தல், 2022ல் நடக்க உள்ளது. பா.ஜ.,வின் கோட்டையை, சிவசேனா கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
09-டிச-201912:41:04 IST Report Abuse
Malick Raja .. தாக்கரே மகனுக்கு முடியாதா என்ன ?
Rate this:
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
03-டிச-201909:36:29 IST Report Abuse
PANDA PANDI BULLET TRAIN முதலில் நிறுத்துங்கள். அந்த பணத்தில் கஜா புயல் நிவாரணம் அளித்தால் நன்று. பட்னாவிஸ் 48 மணிநேரம் முதல்வர் ஆனபொழுது 40c காணோமாம்.. நல்ல DESH BAKTH.. மற்றவர்களுக்கு இவர்கள் மட்டுமே ரொம்ப நல்லவர்கள் போன்று நடித்துக்காட்டுவதில் கில்லாடிகள். பின் யாருடைய TRAINING. எல்லாம் அவன் செயல் தலைவா.. மோட்டு பதலு... ஹி ஹி.. பிசேபி நாடக COMPANY. BNC இப்படி பெயர் மாற்றினாலும் தகுமோ...
Rate this:
meenakshisundaram - bangalore,இந்தியா
04-டிச-201904:10:50 IST Report Abuse
meenakshisundaramவேணுன்னா அத்திப்பட்டிக்கு புல்லெட் ரயில் வேண்டாம் ,அதுக்காக மும்பைக்கும் வேண்டான்னு சொல்ல வேண்டாம் .எந்த காலத்துலே உள்ள சிந்தனை?...
Rate this:
Cancel
Vena Suna - Coimbatore,இந்தியா
02-டிச-201917:26:29 IST Report Abuse
Vena Suna முதல்ல,அவங்க பண்றது, என்னன்னா மராத்திக்காரனுக்கு மட்டும் தான் வேலைன்னு சொல்வாங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X