சென்னை: தமிழக வேளாண் துறையின் தீவிர முயற்சியால், பிரதமரின் உதவித்தொகை திட்டத்தில், 35.6 லட்சம் விவசாயிகள் சேர்க்கப் பட்டுள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு, ஆண்டு தோறும், 6,000 ரூபாய் உதவித்தொகை வழங்கும் மத்திய அரசு திட்டம், பிப்., முதல் நடைமுறையில் உள்ளது. இந்த உதவித் தொகை, தலா, 2,000 ரூபாய் வீதம், மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில், சிறு, குறு விவசாயிகள் அதிகம் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், இத்திட்டத்தின் கீழ் பயன் பெற வேண்டிய விவசாயி களுக்கு, போதிய ஆவணங்கள் இல்லை.
இதனால், திட்ட பயனை அனுபவிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. வேளாண் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி, இயக்குனர் தட்சிணாமூர்த்தி, தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பையன் ஆகியோர் எடுத்த முயற்சிகளால், மத்திய, மாநில அரசுகள், சில சலுகைகளை வழங்கின. இதையடுத்து, திட்டத்தில் கூடுதல் விவசாயிகளை சேர்ப்பதற்காக, மாவட்ட வாரியாக, சிறப்பு முகாம்கள் நடத்தப் பட்டன.வேளாண்துறையின், 'உழவன் ஆப்' என்ற மொபைல் போன் செயலி வாயிலாக, விவசாயிகள் முன்பதிவு நடந்தது. இவ்வாறு, வேளாண் துறையினர் எடுத்த முயற்சியால், இத்திட்டத்தில், 35.6 லட்சம் தமிழக விவசாயிகள் சேர்க்கப்பட்டுஉள்ளனர். இவர்களில், 25.44 லட்சம் விவசாயிகளுக்கு, மூன்று தவணையாக, 6,000 ரூபாய் வழங்கப் பட்டுள்ளது. மற்ற விவசாயிகளுக்கு, முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை நிதி கிடைத்துள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும், 6,000 ரூபாய் பெற்று தருவதற்கான ஏற்பாடுகளில், வேளாண் துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர்.
இத்திட்டம், தமிழக விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திட்டத்தில், மேலும் பல விவசாயிகளை சேர்க்க, முதல்வர் இ.பி.எஸ்., ஆலோசனை வழங்கி உள்ளதாக தெரிகிறது.