சென்னை: 'மழை வெள்ளத்திலும் தேர்வு நடத்தப்படும்' என, பிடிவாதமாக அறிவித்த, அரசு தேர்வுத்துறை இயக்குனரின் நடவடிக்கையால், மாணவர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், ஏழை குடும்பங்களை சேர்ந்த, எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, மத்திய அரசு சார்பில், மாதம், 1,000 ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு, கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.
பெற்றோர் அச்சம்
இந்த உதவித்தொகையை பெறுவதற்கான, நடப்பு கல்வி ஆண்டிற்கான தேர்வு, நேற்று நடப்பதாக இருந்தது. 1.51 லட்சம் மாணவ - மாணவியருக்கு, 533 மையங்களில் தேர்வறைகள் ஒதுக்கப்பட்டன. கிராமப்புறங்களை சேர்ந்த மாணவர்கள், பிற ஊர்களில் உள்ள பெரிய பள்ளிகளுக்கு சென்று தேர்வு எழுத அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும், நவம்பர், 28 முதல் கன மழை பெய்து வருகிறது. வடக்கே திருவள்ளூர் மாவட்டம் முதல், தெற்கே தென்காசி வரை, கனமழையால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த மழை வெள்ளத்துக்கு நடுவே, 13 வயது நிறைந்த சிறுவர் - சிறுமியரை, பிற ஊர்களுக்கு தேர்வுக்கு எப்படி அனுப்புவது என, பெற்றோர் அச்சத்துடன் இருந்தனர்.
பள்ளி ஆசிரியர்களும், மாவட்ட கல்வி அதிகாரிகளும், தேர்வு துறையினரிடம், தேர்வை ஒத்திவைக்கும்படி, இரண்டு நாட்களாக கோரினர். சென்னை வானிலை ஆய்வு மையம், கனமழைக்காக, 'ரெட் அலெர்ட்' கொடுத்தது. பல மாவட்டங்களில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
கேள்விக்குறியானது
அதன் பின்னும், 'தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படும்' என, தேர்வுத்துறை இயக்குனர் உஷாராணி அறிவித்தார். அதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.இதுதொடர்பாக, நம் நாளிதழை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் பலர் தொடர்பு கொண்டு, தேர்வை தள்ளி வைக்க அறிவுறுத்தும்படி கூறினர்.
தேர்வுத்துறை இயக்குனரை தொடர்பு கொண்டபோது, வானிலை மையத்தின் அறிவிப்பு தனக்கு தெரியாதது போல, 'மழை பெய்கிறதா...' என்றார். 'இந்த வெள்ளத்தில் தேர்வை நடத்தினால், மாணவர்கள் பாதிக்கப்படுவர்; பஸ்கள் ஓடவில்லை. பல பகுதிகளில் வெள்ள நீர் ஏரிபோல தேங்கியுள்ளது. 'தேர்வு மையங்களுக்கு மாணவர்களும், ஆசிரியர்களும் படகில் செல்லும் நிலை ஏற்படும்' என, புரிதல் ஏற்பட முயன்றும் பயனில்லை. 'தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படும்' என, அவர் உறுதியாக கூறினார்.
பள்ளி கல்வி துறையின் மற்ற அதிகாரிகள் பேசியதை அடுத்து, தேர்வை தள்ளி வைக்க, பள்ளி கல்வி முதன்மை செயலர் உத்தரவிட்டார். அதன்பிறகும், தேர்வு தள்ளிவைப்பு குறித்து, தேர்வுத்துறை இயக்குனர் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை. தேர்வு தள்ளி வைக்கும் அறிவிப்பு, இரவில் வெளியானதால், மாணவர்களுக்கு சரியாக சென்றடையவில்லை.
வீடு திரும்பினர்
இதனால், கிராமப்புற மாணவர்கள், நேற்று காலை வெள்ளத்திலும், மழையிலும் மிகவும் சிரமப்பட்டு, தேர்வு மையங்களுக்கு சென்றனர். அங்கு சென்ற பிறகே, 'தேர்வு இல்லை' என, தெரிந்து, வீடு திரும்பினர். மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் நிலையில் உள்ள, தேர்வு துறையின் தலைமை பொறுப்பில் உள்ள அலுவலரின் அலட்சியத்தால், தமிழகம் முழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மற்றும் பெற்றோருக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.