டிச.,27,30 ல் இரு கட்டங்களாக தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

டிச.,27,30 ல் இரு கட்டங்களாக தமிழக ஊரக உள்ளாட்சி தேர்தல்

Updated : டிச 02, 2019 | Added : டிச 01, 2019 | கருத்துகள் (4)
Share
தயார்,உள்ளாட்சி தேர்தல், அறிவிப்பு, கலெக்டர், உத்தரவு

ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் டிச.,27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கும் என தமிழக தேர்தல் கமிஷனர் பழனிசாமி அறிவித்துள்ளார். மேலும் நிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் இன்று (டிச.,02) அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் கமிஷனர் தெரிவித்துள்ளார். இன்று முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலானது.

தமிழகத்தில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர், ஊராட்சி தலைவர் உள்பட 1.50 லட்சம் உள்ளாட்சி பதவிகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2016 முதல் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனிடையே டிச. 13ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை அறிவித்து அதுகுறித்த அறிக்கையை தாக்கல் செய்யும்படி மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் அனைத்து முன்னேற் பாடுகளையும் செய்து வந்தது. இதனைத் தொடர்ந்து நவ.,28 ம் தேதி உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தின் போது இரு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடத்த பல அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தேர்தல் கமிஷனர் பழனிசாமி, உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்புக்களை வெளியிட்டார். தமிழகத்தில் நகர்ப்புற அமைப்புக்களுக்கான உள்ளாட்சி தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். ஊரக உள்ளாட்சி அமைப்புக்களுக்கான தேர்தல் அமைப்புக்களுக்கான தேர்தல் அட்டவணையை மட்டும் வெளியிட்டார்.


தேர்தல் அட்டவணை விபரம் :


வேட்புமனு தாக்கல் : டிச.,6
வேட்புமனு தாக்கலுக்கான கடைசி நாள் : டிச.,13
மனுக்கள் பரிசீலனை : டிச.,16
மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள் : டிச.,18
முதல் கட்ட ஓட்டுப்பதிவு : டிச.,27
2 ம் கட்ட ஓட்டுப்பதிவு : டிச.,30
ஓட்டு எண்ணிக்கை : ஜன., 2
தேர்தல் நடைமுறைகள் முடியும் நாள் : ஜன.,4
கவுன்சிலர்கள் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு : ஜன.,6
தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் : ஜன.,11

தொடர்ந்து தேர்தல் கமிஷனர் பழனிசாமி கூறுகையில், தேர்தல் நடைபெறும் நாளன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடைபெறும். தேசிய தகவல் மையத்துடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. முதல்கட்ட தேர்தலில் 1 கோடியே 64 லட்சம் பேர் ஓட்டக்க உள்ளனர். 2ம் கட்ட தேர்தலில் 1 கோடியே 67 லட்சம் பேர் ஓட்டளிக்க உள்ளனர்.

வாக்குசீட்டு முறையில் தேர்தல் :

கிராம ஊராட்சி தலைவர்களுக்கான வேட்பாளர் செலவு வரம்பு ரூ.34 ஆயிரம். தேர்தல் முடிந்து 30 நாட்களுக்குள் செலவு கணக்கை ஒப்படைக்காவிட்டால் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது. வழக்கம் போல் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்படும். ஊராட்சி பதவிகளுக்கு 4 வண்ணங்களில் ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படும். கிராம ஊராட்சி கவுன்சிலர்களுக்கு வெள்ளை நிறம், கிராம ஊராட்சி தலைவர் இளஞ்சிவப்பு, ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கு பச்சை நிறம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு மஞ்சள் நிறத்தில் ஓட்டுச்சீட்டு பயன்படுத்தப்படும். 870 தேர்தல் அலுவலர்களும், 16,840 தேர்தல் பார்வையாளர்களும் நியமிக்கப்பட உள்ளனர்.

நிர்வாக காரணங்களால் மேயர் பதவிக்கான தேர்தல் தேதி அறிவிப்பு வெளியிடப்படவில்லை. நகர்புற பகுதிகளுக்கும் தற்போது தேர்தல் இல்லை. ஊரக பகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் அறிவிப்பு வெளியிடப்படும். புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறை தேவைப்பட்டால் தேர்தலுக்கு பின் நடத்தப்படும் என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X