தமிழ்நாடு

ஏரியின் கரைகள் உடைகின்றன! பொதுமக்கள் கவலை

Added : டிச 01, 2019
Advertisement
ஏரியின் கரைகள் உடைகின்றன! பொதுமக்கள் கவலை

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. அதே சமயம், ஏரியின் கரைகள் உடைவதால், பொதுமக்கள் கவலையடைகின்றனர். பொதுமக்கள் அழைப்புக்கு உடனடி நடவடிக்கை எடுக்க, கோரிக்கை எழுந்துள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத் தில், வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் ஓரளவு பெய்ததால், ஏரிகள் வேகமாக நிரம்பின. ஆனால், நவம்பர் மாதம் துவக்கத்தில் இருந்தே, வட கிழக்கு பருவ மழை சரிவர பெய்யாததால், விவசாயிகள் கவலையடைந்தனர். நீர்நிலைகளும் முழுமையாக நிரம்பாமல் இருந்தது.

இந்நிலையில், நான்கு நாட்களாகவே, வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து மழை பெய்து வருகிறது. இரு நாட்களாக, காஞ்சி புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கனமழை பெய்துள்ளது.நேற்று காலை நிலவரப்படி, காஞ்சி, செங்கல்பட்டு மாவட்டங்களில், செய்யூரில் அதிகபட்சமாக, 13.3 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. கன மழை காரணமாக, பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளில், 89 ஏரிகள் முழுமை யாக நிரம்பியுள்ளதாக பொதுப்பணித் துறையினர் தெரிவிக்கின்றனர். ஏரிகள் வேகமாக நிரம்புவதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.

சிற்றேரி கரை:
ஏரிகள் வேகமாக நிரம்பும் அதேசமயத்தில், சில இடங்களில் ஏரிக்கரைகள் உடையும் அபாயமும் ஏற்படுகின்றன. வாலாஜாபாத் ஒன்றியத்தில், பரந்துார் பெரிய ஏரி மற்றும் சிற்றேரி உள்ளது.இவ்விரு ஏரிகளில், வட கிழக்கு பருவ மழையால், பெரிய ஏரி மட்டும், நேற்று முன்தினம் இரவு நிரம்பியதில், கலங்கல் வழியாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்த பெரிய ஏரி கலங்கல் நீரால், சிற்றேரி நிரம்ப வேண்டும். சிற்றேரி பிரதான மேட்டு மதகில், தடுப்பு இல்லாததால், விவசாயிகள் மணல் மூட்டைகள் போட்டு அடுக்கி விட்டனர்.மழை நீர், ஏரிக்குள் செல்ல முடியாமல், கரை உடைப்பெடுத்து, உபரி நீர் செல்லும் கால்வாய் வழியாக தண்ணீர் செல்கிறது.இந்த உபரி நீர் கால்வாய் வழியாக தண்ணீர் செல்வதால், கிராமப்புற அரசு பஸ்களின் இயக்கமும் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளன.

குறிப்பாக, காஞ்சிபுரத்தில் இருந்து, பரந்துார் வழியாக, அக்கமாபுரம், செல்லம்பட்டிடை, வரதாபுரம் ஆகிய கிராமப்புற பஸ்கள் மாற்று வழியாக இயக்கப்பட்டன. இதில், ஒரு தனியார் பஸ் மட்டுமே, பரந்துார் வழியாக இயக்கப்படுகிறது.

ஏரிக்கரை உடைப்பு:

இதேபோல், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், சுங்குவார்சத்திரம் அருகே, செல்வழிமங்கலம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சிக்குட்பட்ட ஜம்போடை கிராமத்தில், வட்டார வளர்ச்சி அலுவலக கட்டுப்பாட்டில் சிற்றேரி உள்ளது.இந்த ஏரி நீரை பயன்படுத்தி, 80 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்படுகிறது. நேற்று பெய்த கன மழையால், இந்த ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்து ஏரிக்கரை உடைந்தது.வீணாகும் உபரி நீர் வயல்வெளி பகுதியில் செல்வதால், பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லை.

இந்நிலையில், உடைந்த ஐம்போடை ஏரியை, காஞ்சிபுரம் சப் - கலெக்டர் சரவணன், நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.உடைந்த ஏரிக்கரையை மண் மூட்டைகளை கொண்டு சீரமைக்க உத்தரவிட்டார். இரண்டு நாட்களாக, கன மழை பெய்து வருவதால், சில இடங்களில் கரை உடைப்பு ஏற்படுகின்றன. இதனால், கிராமவாசிகள் அச்சத்தில் உள்ளனர். ஏரிக்கரை உடைப்பு குறித்து, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால், உடனடியாக வந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்து உள்ளது.

இணையதளத்தில் பழைய தகவல்கள்காஞ்சிபுரம் மாவட்ட அரசு இணையதளத்தில் உள்ள பேரிடர் பகுதியில், அவசர கால தொலைபேசி எண், 50 மண்டல குழுக்களின் விபரங்களை பெற, பொதுமக்கள் சிலர், மாவட்ட இணையதள பக்கத்தில் தேடியுள்ளனர்.ஆனால், அதில் உள்ள அனைத்து விபரங்களும், முந்தைய ஆண்டுகளின் விபரங்களாகவே இருந்துள்ளது. இதனால், 50 மண்டல குழுக்களின் விபரம் கிடைக்காமல், பொதுமக்கள் சிலர் அவதிப்பட்டனர்.

தயார் நிலையில் கட்டுப்பாட்டு அறை!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், பேரிடர் மேலாண்மை பிரிவில் கட்டுப்பாட்டு அறை துவங்கப்பட்டு உள்ளது.சாலையில் மரம் விழுதல், சுவர் இடிந்து விழுதல், ஏரிக்கரை உடைந்து ஊருக்குள் தண்ணீர் புகும் பாதிப்பு போன்ற புகார்களுக்கு, 044 - - 2723 7207 என்ற எண்ணையும், 94450 71077 என்ற, 'வாட்ஸ் ஆப்' எண்ணையும் தொடர்பு கொள்ளலாம்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X