வரதராஜபுரம் குடியிருப்பை வெள்ள நீர் சூழ்ந்தது| Dinamalar

வரதராஜபுரம் குடியிருப்பை வெள்ள நீர் சூழ்ந்தது

Added : டிச 02, 2019
 வரதராஜபுரம் குடியிருப்பை வெள்ள நீர் சூழ்ந்தது

படப்பை : வரதராஜபுரம் குடியிருப்பு பகுதியை வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.

குன்றத்துார் தாலுகா, படப்பை அருகே அமைந்துள்ளது வரதராஜபுரம் ஊராட்சி. தாம்பரம் அருகே, சென்னையின் புறநகர் பகுதியில், வரதராஜபுரம் உள்ளதால், இங்கு குடியிருப்போரின் எண்ணிக்கை அதிகரித்தது. இதனால், வயல்வெளி நிலங்கள் எல்லாம் குடியிருப்பாக மாறி விட்டன.ஆண்டுதோறும் வடக்கிழக்கு பருவமழையின் போது வரதராஜபுரம் ஊராட்சிக்குட்பட்ட கஜலட்சுமி நகர், பரத்வாஜ் நகர், பி.டி.சி.குடியிருப்பு, அஷ்டலட்சுமி நகர் உள்ளிட்ட குடியிருப்பு பகுதியில், மழை நீர் சூழ்வது வழக்கம்.மழை நீரை வெளியேற்ற, வரதராஜபுரத்தை கடந்து செல்லும் அடையாறு கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்றி, கால்வாய் அகலப்படுத்தப்பட்டது.

மேலும், குடியிருப்பு பகுதியில் மழை நீர் வெளியேற, பல லட்சம் செலவில் சிறுபாலங்கள் கட்டப்பட்டன.இதனால், இந்தாண்டு மழைக் காலத்தில் வெள்ளப்பெருக்கு குறைவாக இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இரண்டு தினங்களாக கொட்டி தீர்த்த கனமழையில், வரதராஜபுரம் குடியிருப்பு பகுதியில் மீண்டும் வெள்ள நீர் சூழ்ந்தது.இதனால், முதியவர்கள், குழந்தைகள் வெளியே செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

மணிமங்கலம் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர், வரதராஜபுரம் வழியாக அடையாறு கால்வாயை சென்றடைவதால், வரதராஜபுரத்தில் வெள்ள பாதிப்பு மேலும் அதிகரித்துள்ளது. மழை தொடர்ந்தால், இங்கு மேலும் பாதிப்பு அதிகரிக்கும். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என, வரதராஜபுரம் மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X