சாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

Added : டிச 02, 2019
 சாலையில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு

செங்கல்பட்டு : சிங்கபெருமாள்கோவில் தேசிய நெடுஞ்சாலையில், தண்ணீர் செல்வதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

சிங்கபெருமாள்கோவில், பெரியவிஞ்சியம்பாக்கம் ஏரி உள்ளது. இங்கு, சில தினங்களாக மழை பெய்ததால், ஏரி நிரம்பி, உபரிநீர் வெளியேறுகிறது. இங்கு, வெளியேறும் நீர், தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்வது வழக்கம். இந்நிலையில், தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள, மழைநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டதால், தண்ணீர் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால், தண்ணீர் அனைத்தும், தேசிய நெடுஞ்சாலையில் செல்கிறது.

சென்னையில் இருந்து, தென் மாவட்டம் செல்லும் அரசு பஸ் உட்பட அனைத்து வாகனங்களும், மேற்கண்ட பகுதியில் சிக்கி தாமதமாக செல்கின்றன. இருசக்கர வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையறிந்த, தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் காட்டாங்கொளத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, கலெக்டர் ஜான் லுாயிஸ் நேற்று உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து, தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர், ஜே.சி.பி., இயந்திரம் மூலம், தண்ணீரை அப்புறப்படுத்தும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டனர்.மறைமலை நகர் போலீசார், போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X