மறுபடியும் முதலில் இருந்தா? காங்., - ம.ஜ.த., இடையே கூட்டணி பேச்சு...| Dinamalar

மறுபடியும் முதலில் இருந்தா? காங்., - ம.ஜ.த., இடையே கூட்டணி பேச்சு...

Updated : டிச 03, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (10)
Share
காங்., ம.ஜ.த., கூட்டணி, சித்தராமையா, கர்நாடகா, எடியூரப்பா,

பெங்களூரு: உளவுத்துறை அறிக்கையால், கர்நாடக இடைத்தேர்தலுக்கு முன்னரே, மீண்டும் கூட்டணி அமைப்பது குறித்து, காங்கிரஸ் - ம.ஜ.த., இடையே பேச்சு துவங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மறுபடியும் முதலில் இருந்தா என, மாநில வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

'கர்நாடகாவில், 15 தொகுதிகளுக்கு, 5ம் தேதி நடக்கும் இடைத்தேர்தல் முடிவு வெளியான பின், மாநில அரசியலில் மாற்றங்கள் ஏற்படும்' என, எதிர்க்கட்சியினரும்; 'மாற்றம் வராது' என, பா.ஜ.,வினரும் கூறி வருகின்றனர்.

மஹாலட்சுமி லே - அவுட், யஷ்வந்த்பூர், கே.ஆர்., புரம், சிக்கபல்லாபூர், சிவாஜி நகர், ஹொஸ்கோட், கே.ஆர்., பேட், ஹுன்சூர், ஹிரேகெரூர், அதானி, கோகாக், காக்வாட், விஜயநகர், ராணி பென்னுார், எல்லாப்பூர், கோகாக் ஆகிய, 15 தொகுதிகளின் இடைத்தேர்தலில், பல தொகுதிகளில், பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்படும் என, உளவுத்துறை தகவல் வெளியாகி உள்ளது.


வாய்ப்பே இல்லைபா.ஜ., அரசுக்கு பெரும்பான்மை கிடைக்க வேண்டும் என, இடைத்தேர்தலை சவாலாக நினைத்து, தொகுதிகளை சுற்றி வந்து, முதல்வர் எடியூரப்பா பிரசாரம் செய்து வருகிறார். 'பா.ஜ., 15க்கு 15 தொகுதிகளிலும் வெற்றி பெறும். எங்கள் அரசு, பலமடையும். மூன்றரை ஆண்டுகள், நானே முதல்வராக இருப்பேன். ம.ஜ.த., - காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை' என, அவர் கூறி வருகிறார்.'ஒருவேளை பா.ஜ.,வுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்காவிட்டால், மீண்டும் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசு அமையும்' என, காங்கிரஸ் தலைவர்கள் பேச துவங்கிஉள்ளனர்.கூட்டணி அரசு கவிழ்ந்த பின், பாம்பும், கீரியுமாக இருந்த காங்கிரஸ் - ம.ஜ.த., தலைவர்களுக்கு, உளவுத்துறை அறிக்கைக்கு பின், அதிகார ஆசை மீண்டும் துளிர்விட்டு உள்ளது.காங்கிரசின் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பரமேஸ்வர், சதீஷ் ஜார்கிஹோளி உட்பட, பலரும் கூட்டணி குறித்து பிரசாரங்களில் கூறி வருகின்றனர்.


சலசலப்பு


எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவும் கூட, தேர்தல் பிரசாரத்தின் போது, 'டிச., 9ம் தேதிக்கு பின், எங்களின் அரசு ஆட்சிக்கு வரும்' என, கூறுகிறார். நேற்று காலை கோகாக்கில், முன்னாள் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, ஊடகத்தினரிடம், ''பா.ஜ., குறைந்த தொகுதிகளில் வெற்றி பெற்றால், மீண்டும் காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி அரசு அமைந்தாலும் ஆச்சரியப்பட முடியாது,'' என்றார்.

கோகாக்கில் நேற்று முன்தினம் பேசிய முன்னாள் முதல்வர் குமாரசாமி, ''இத்தொகுதியின் ம.ஜ.த., வேட்பாளர் அசோக் பூஜார் வெற்றி பெற்றால், எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் அமைச்சராவது உறுதி,'' என கூறியது, சலசலப்பை ஏற்படுத்தியது.

காங்கிரஸ், ம.ஜ.த., தலைவர்கள் தங்களின் மனஸ்தாபங்களை மறந்து, மீண்டும் கைகோர்த்து அரசு அமைக்க முற்பட்டால், பா.ஜ., கைகளை கட்டிக்கொண்டு மவுனமாக அமர்ந்திருக்குமா என்ற கேள்வியும் எழுந்து உள்ளது.


அரசு நீடிக்கும்பா.ஜ.,வுக்கு எட்டுக்கும் குறைவான தொகுதிகள் கிடைத்தால் மட்டுமே காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி பேச்சு வலுவடையும். இல்லையெனில், பா.ஜ., அரசு நீடிக்கும் என்பது உறுதி.டிசம்பர். 5ம் தேதி நடக்கும் தேர்தலில் வாக்காளர்கள், யாருக்கு சாதகமாக தீர்ப்பு அளிப்பர் என்பது தெரியவில்லை.


பா.ஜ., அரசு ஏன் கவிழப்போகிறது?


முதல்வர் எடியூரப்பா கையில் 105 எம்.எல்.ஏ.,க்கள் இல்லையா? கூட்டணி அரசில் முதல்வராக இருந்த குமாரசாமிக்கு, காங்கிரசார் கொடுக்கக்கூடாத கஷ்டத்தை கொடுத்தனர். இனி காங்கிரசுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. ஒரு முறை செய்த தவறை, மீண்டும் செய்ய மாட்டோம். பா.ஜ., அரசு எதற்காக கவிழ வேண்டும்?

- எச்.டி.தேவகவுடா, தேசிய தலைவர், ம.ஜ.த.,

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X