ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மழை அளவு சதத்தை தாண்டியது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.,17ல் தொடங்கியது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களாக ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. நவ.,29ல் 100 மி.மீ., மழையளவு பதிவான நிலையில், நேற்று முன்தினம் கடற்கரை பகுதிகளான ராமேஸ்வரத்தில் 112.30 மி.மீ., தங்கச்சிமடம் 118.00 மி.மீ., பாம்பன் 116.00 மி.மீ அளவு மழை பெய்துள்ளது.
மாவட்டத்தின் வடகிழக்கு பருவமழையின் சராசரி அளவான 501 மி.மீ., அளவை கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பல ஆண்டுகளுக்கு பிறகு 643 மி.மீ., மழையளவு பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்மழையால் மாவட்டத்தில் 33 வீடுகள் சேதமடைந்துள்ளது.