பொது செய்தி

தமிழ்நாடு

அரசுப்பள்ளி மாணவர்களுக்கு குடைகள்: தனியார் பள்ளிக்கு நிகராக முயற்சி செய்யும் ஆசிரியர்

Added : டிச 02, 2019
Advertisement
 அரசுப்பள்ளி மாணவர்களுக்கு குடைகள்: தனியார் பள்ளிக்கு நிகராக முயற்சி செய்யும் ஆசிரியர்

கடலாடி:ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே நரசிங்கக்கூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் மழை காலத்தை முன்னிட்டு நன்கொடையாக குடைகள் வழங்கப்பட்டது.

அரசுப்பள்ளியில் அனைத்து கிராமப்புற மாணவர்களும் ஆர்வமுடன் படிக்க வர வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக அடிக்கடி பல்வேறு புதுமைகளையும், பயனுள்ள கற்றல் திறனையும் வெளிப்படுத்தி வருகிறார் தலைமையாசிரியர் கிறிஸ்து ஞான வள்ளுவன். தனியார் பள்ளிகளுக்கு நிகராக நரசிங்கக்கூட்டம் அரசுப்பள்ளிஅனைத்து கட்டமைப்பு வசதிகளையும் தனியார் தொண்டு நிறுவனங்கள், நன்கொடையாளர்கள், கல்வியாளர்களிடமிருந்து பெற்றுள்ளது.

மாணவர்களிடம் பாடத்திற்கும் அப்பால் பனை ஓலையில் கலை நயப்படைப்புகள், தினமலர் பட்டம், சிறுவர் மலர் வாசிக்க செய்தல், பறவை இரை மேடை, மரக்கன்றுகள் நடுதல், மேடைப்பேச்சு பயிற்சி, அறிவியல் கண்காட்சி, தேசத்தலைவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் உள்ளிட்ட பொது அறிவு விஷயங்களை பள்ளி நேரங்களில் புகுத்துவதால், மாணவர்கள் பள்ளி எப்போது திறக்கும் என்ற ஆவலில் உள்ளனர்.

கண்டிப்பான அணுகுமுறையைக் காட்டிலும், இயல்பான புரியும் வண்ணம், மனதில் பதியும் முறையில் பாடம் நடத்தி சுற்றுவட்டார மாணவர்கள், பெற்றோரின் அன்பையும், பாராட்டையும் பெற்றுள்ளார் தலைமையாசிரியர் கிறிஸ்து ஞானவள்ளுவன்.அவர் கூறியதாவது: பள்ளி மாணவப்பருவத்தில் கற்கும் விஷயங்கள் மனதில் எளிதில் பதிந்து விடுகிறது.

அரசுப்பள்ளிதானே என்ற எண்ணத்தை மாற்றி, பாடக் கல்வியுடன், வெளியுலகம் தொடர்புடைய செய்திகளையும் வழங்குகிறேன். பள்ளிக் கல்வி அலுவலர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர், மேலாண்மைக்குழுவினர் ஒத்துழைப்பு உள்ளது.

தற்போது மழை காலம் என்பதால், கிராமப்புற ஏழை மாணவர்களின் நிலையை கூறி 4000 ரூபாய்க்கு குடைகளை நன்கொடையாளர் வேம்பார் அந்தோணிராஜ் மூலம் வாங்கி கொடுத்து உள்ளோம், என்றார். ஆசிரியர் ஐயப்பன் உடனிருந்தார்.மாணவர்கள் ஆர்வமுடன் வண்ணக்குடைகளுடன் பள்ளியை வலம் வந்தது மனதிற்கு இதமாக இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X