தமிழ்நாடு

வெளியேற்றம்! மாவட்டத்தில் பெரிய ஏரிகள் நிரம்பியதால் உபரி நீர்... 2000 வீடுகள் பாதிப்பு: 1000 பேர் முகாமில் தஞ்சம்

Added : டிச 02, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 வெளியேற்றம்! மாவட்டத்தில் பெரிய ஏரிகள் நிரம்பியதால் உபரி நீர்... 2000 வீடுகள் பாதிப்பு: 1000 பேர் முகாமில் தஞ்சம்

கடலுார்:கடலுார் மாவட்டத்தில், 2ம் நாளாக கொட்டித் தீர்த்த கன மழையால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட ஆயிரம் பேர், 6 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடலுார் மாவட்டத்தில், கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 8.30 மணி முதல், நேற்று காலை 8.30 மணி வரை அதிகபட்சமாக கொத்தவாச்சேரியில் 175 மி.மீ.,; குறைந்த அளவாக லக்கூரில் 48.20 மி.மீ., மழை பெய்துள்ளது.மாவட்டத்தில் உள்ள கெடிலம், பெண்ணையாறு, பரவனாறு ஆகிய ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. 2 ஆயிரம் குடிசைகள் தண்ணீரில் மூழ்கின. 60க்கும் மேற்பட்ட நகர்களில், தண்ணீர் புகுந்துள்ளது.

மாவட்டம் முழுவதும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், குமராட்சி, காட்டுமன்னார்குடி, கே.என்.பேட்டை, கோண்டூர், விருத்தாசலம் மேல்பாதி, கன்னங்குடி ஆகிய 6 முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றன.

வீராணம் ஏரி முழுவதும் நிரம்பியுள்ளதால், வடவாறு வழியாக 300 கன அடி தண்ணீரும், காட்டாறுகள் வழியாக 5,300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.அதேபோல், பெருமாள் ஏரி மொத்த கொள்ளளவை எட்டியுள்ளதால், 1500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நெய்வேலி சுரங்கத்தில் அதிகளவு தண்ணீர் சூழ்ந்துள்ளதால், நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.டெல்டாவில் வெள்ளப்பெருக்குகீழணையில் நீர்மட்டம் 7 அடியாக வைக்கப்பட்டு, அணைக்கு வரும் 9,134 கன அடி தண்ணீர், அப்படியே கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. வடவாறு மூலம், வீராணம் ஏரிக்கு அதிக நீர்வரத்து காரணமாக, கடந்த இரு நாட்களாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

வீராணம் ஏரிக்கு வடவாற்றில் இருந்து நேற்று காலை 5,312 கன அடி நீர் வரத்து இருந்தது. வீராணம் ஏரி நிரம்பிய நிலையில், வெள்ளியங்கால் ஓடையில் 3,000 கன அடி, சேத்தியாத்தோப்பு வி.என்.எஸ்.,சில் 2,554 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.அரியலுார் மாவட்டத்திலும் பலத்த மழை காரணமாக ஜெயங்கொண்டம் அருகே உள்ள பொன்னேரி நிரம்பியதால், 863 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் வளவனேரியை கடந்து, வடவாற்றில் 1500 கனஅடியாக நீர்வரத்து உள்ளதால், வெள்ளியங்கால் ஓடையில் கூடுதலாக நீர் திறக்கப்பட்டுள்ளது.

லால்பேட்டை, சர்வராஜன்பேட்டை பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலை மட்டத்திற்கு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளியங்கால் ஓடை, மணவாய்க்கால் உள்ளிட்ட வடிகால் மூலம், கோப்பாடி மதகிற்கு வரும் 9,500 கன அடி தண்ணீர் முழுவதும் பழைய கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது.-தொடர்ச்சி ௨ம் பக்கம்இதனால் வாழைக்கொல்லை, கந்தகுமரன், வெய்யலுார், வெள்ளக்கொடி, டி.நெடுஞ்சேரி, சிறகிழந்தநல்லுார் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறைக்கு சொந்தமான 228 ஏரிகளில் 75 சதவீதம் நிரம்பியுள்ளன. வீனஸ் மதகு வழியாக தண்ணீர் வெளியேற்றம்கடலுார் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் சாலையில் உள்ள வீராணம் ஏரி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக, முழு கொள்ளளவில் உள்ளது.

வீனஸ் மதகு வழியாக தண்ணீரை வாலாஜா ஏரிக்கு அனுப்பி, அதன் வழியாக பெருமாள் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு வந்தது.கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையினால் கீழணையிலிருந்து, வீராணத்திற்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூதங்குடி வீனஸ் மதகு வழியாக தண்ணீரை வெளியேற்றி வருகின்றனர். இந்த தண்ணீர், பாழ்வாய்க்கால் வழியாக வெள்ளாற்றிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

லால்பேட்டை பொதுப்பணித்துறை உதவிப் பொறியாளர் ஞானசேகரன் கூறுகையில், 'வீராணம் ஏரி முழு கொள்ளளவான 48 அடி முழுவதுமாக நிரம்பியுள்ள நிலையில், ஏரியில் இருந்து வீனஸ் மதகு வழியாக, 5 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. காட்டாறு வழியாக 4 ஆயிரம் முதல் 5 கன அடி வரை வெளியேற்றப்பட்டு வருகிறது' என்றார்.

ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர் சேதம் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் டெல்டா பகுதியில், நேரடி விதைப்பு மூலம், ஒரு லட்சம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது 100 நாட்கள் கொண்ட பயிராக உள்ளது. கனமழையால், பல இடங்களில் வயல்களில் தண்ணீர் புகுந்துள்ளது. விளைநிலங்களில் தண்ணீர் வடிய முடியாமல் தேங்கி நிற்கிறது.சிதம்பரம், பரங்கிப்பேட்டை, கிள்ளை, குமராட்சி, காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஒரு லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடி நெற் பயிர்களை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மழையால் மகசூல் குறையும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
02-டிச-201919:52:05 IST Report Abuse
Bhaskaran ஏறி குளம்களை தூர்வாராமல் தாம்பாளம் போலாக்கி எளிதில் நீர் நிரம்பி வீணாக கடலுக்கு அனுப்புவதில் எங்களை யாரும் மிஞ்சமுடியாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X