இளையான்குடி:இளையான்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தேவையான அடிப்படை வசதி கிடைக்காததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இளையான்குடி அரசு மருத்துவமனையில் தினந்தோறும் 500க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகப்பேறு பிரிவில் பல லட்சம் ரூபாய் செலவில் செயல்பட்டு வந்த குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் கடந்த 6 மாதங்களாக பழுதாகி கிடப்பதால் அந்த பிரிவில் உள்ள நோயாளிகள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
மேலும் மருத்துவமனை வளாகத்தில் மழை நீர் தேங்கி கிடப்பதால் நோயாளிகள் உள்ளே செல்ல சிரமப்பட்டு வருகின்றனர். டாக்டர்கள் பற்றாக்குறையால் தற்போது காய்ச்சலுக்காக சிகிச்சை பெற வருபவர்கள் நீண்ட நேரம் காத்து கிடக்க வேண்டிய நிலை இருப்பதாக புகார் தெரிவிக்கின்றனர்.
சமூக ஆர்வலர் ராவுத்தர் நயினார் 48, கூறுகையில், இந்த மருத்துவமனையில் டாக்டர்கள், நர்சுகள், சித்தா டாக்டர், மருந்தாளுநர் பணியிடங்கள் நீண்ட வருடங்களாக காலியாக இருப்பதால் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் துப்புரவு பணியாளர்களும் இல்லாததால் மருத்துவமனை வளாகம் முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மாவட்ட நிர்வாகம் நோயாளிகளின் நலன் கருதி மருத்துவமனைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும், என்றார்.