சிவகங்கை:'தீபங்கள் பேசும்... இது கார்த்திகை மாதம்... காற்றில் அசைந்து ஆடிடும் தீப ஒளியே... என வீடுகளில் பெண்கள் உற்சாகமாக விளக்கேற்ற அலங்கார மண் விளக்குகளை காரைக்குடி மாத்துார் ஆர்.பிச்சைமணி தயாரித்து வருகிறார்.
கார்த்திகைக்கு வீடுகளில் விளக்கேற்ற மண் விளக்குகளுக்கு தான் மவுசு அதிகம். அந்த வகையில் மானாமதுரை மண்ணில் தயாரித்த விளக்குகளுக்கு தமிழகம் முழுவதும் தனி வரவேற்பு உண்டு. மானாமதுரையில் தயாராகும் மண் விளக்குகளை வட மாநிலத்தவர்களும் வாங்கி செல்கின்றனர். பழமையிலும் புதுமையை புகுத்தும் நோக்கில், மானாமதுரை மண்ணால் செய்த விளக்குகளில் வர்ணம் பூசியும், பூக்களால் அலங்கரித்து விற்பனை செய்வதில் மகளிர் குழுவினர் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
காரைக்குடி மாத்துாரை சேர்ந்த ஆர். பிச்சைமணி மண் விளக்குகளில் வர்ணம் பூசி அலங்கரித்து விற்பனை செய்து வருகிறார்.ஆர். பிச்சைமணி கூறியதாவது: மானாமதுரை மண் விளக்குகளை 'டிசைன்களாக' வாங்கி அதில் செராமிக்ஸ் கலரை மிக்சிங் செய்து, கலர் கொடுப்போம். அலங்கார பூக்களை விளக்குகளில் 'மோல்ட்' செய்து 'எம்சீல்' போட்டு ஒட்டுவோம். இது தவிர மண் விளக்கில் கலர் மங்காமல் இருக்க 'எனாமல்', வார்னீஸ் அடிப்போம்.
அகல்விளக்கு, சிம்னி விளக்கு,5, 7, 9 மற்றும் 11 முக தட்டு விளக்கு,திருமணம் முடித்த பெண்ணுக்கு வழங்கும் அகல்விளக்கு, பூஜை அறையில் வைக்கப்படும் குபேரர், ஐஸ்வர்ய பானைகளுக்கு டிசைன்ஸ் கொடுத்து தயாரிப்போம். விளக்கு ஒன்று ரூ.10, விளக்கு தட்டுகளின் வேலைபாட்டிற்கு ஏற்ப 120, 180, 220 ரூபாய்க்கு விற்கிறோம், என்றார். ஆர்டருக்கு 91718 48118.---