சிக்கியது லாரி: பேருக்கு குழிய மூடுனா இப்படித்தான் | Dinamalar

சிக்கியது லாரி: பேருக்கு குழிய மூடுனா இப்படித்தான்

Added : டிச 02, 2019

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சிக்கு, பவானி ஆற்றை நீராதாரமாக கொண்டு, இரண்டு கூட்டுக் குடிநீர் திட்டங்களும், புதிய திருப்பூர் மேம்பாட்டு கழகம் மூலம் காவிரி ஆற்றை நீராதாரமாக கொண்டு, ஒரு திட்டமும் செயல்பட்டு வருகிறது.அதேசமயம், மாநகராட்சியின், விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில், குடிநீர் அபிவிருத்தி மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தரைமட்ட தொட்டிகள், கூடுதல் மேல் நிலைத் தொட்டி கட்டப்பட்டு பகிர்மான குழாய்களின் வடிவமைப்பும் திருத்தி அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கென, மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், ரோட்டோரம், குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.ஒரு சில பகுதிகளில், பணி நிறைவு செய்யப்பட்டு, ரோடு செப்பனிடப்பட்டும் வருகின்றன.இந்நிலையில், நொய்யல் வீதியில், பணிகள் நிறைவடைந்த பெரும்பாலான பகுதிகளில், குழி தோண்டிய இடத்தில், மண் கொட்டி இறுக்கம் ஏற்படுத்தப்படாமல் உள்ளது.இதனால், மழையால், குழாய் பதிக்க, தோண்டப்பட்ட குழிகளில் பள்ளம் ஏற்பட்டு வருகிறது. வாகனங்கள், பள்ளத்தில் சிக்கியும் வருகின்றன.
நேற்றுகாலை, 'எம்சாண்ட்' எடுத்துச் சென்ற லாரி, சிக்கிக் கொண்டது. உடனடியாக பொக்லைன் வாகனம் வரவழைக்கப்பட்டு, லாரியில் இருந்து மண் கீழே இறக்கப்பட்டது.அதன்பின், பொக்லைன் வாகனத்தின் உதவியுடன் லாரி மீட்கப்பட்டது.பொதுமக்கள் கூறுகையில், 'குழாய் பதிக்கப்பட்ட இடத்தில், மழையால் தண்ணீர் தேங்கி, தோண்டப்பட்ட இடம் பலவீனமாகி, பள்ளம் ஏற்பட்டது.மண் கொட்டி தற்காலிகமாக பள்ளம் மூடப்பட்டு வருகிறது. மண் இறுகியதும் புதிதாக ரோடு அமைக்கப்பட வேண்டும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X