கம்மாபுரம்:என்.எல்.சி., பரவனாறு ஓடை உடைப்பு ஏற்பட்டு, கம்மாபுரம் பகுதியில் மழைநீர் புகுந்த இடங்களை, சப் கலெக்டர் பிரவீன்குமார் பார்வையிட்டார்.
நெய்வேலி விரிவாக்க பணி காரணமாக பரவனாறு ஓடை, கம்மாபுரம் பகுதி வழியாக திருப்பி விடப்பட்டது. என்.எல்.சி., நிர்வாகத்தால் கரி வெட்டி எடுத்துவிட்டு, கழிவுகள் மற்றும் மணல் கம்மாபுரம், சு.கீனனுார், கோபாலபுரம், ஊ.கொளப்பாக்கம், கொம்பாடிக்குப்பம் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் கொட்டப்படுகிறது.இந்நிலையில், இரு தினங்களாக பெய்த கனமழை காரணமாக என்.எல்.சி., மணல் மேட்டிலிருந்து, மணல் சரிந்து, பரவனாறு ஓடை துார்ந்தது. இந்த, ஓடையில் உடைப்பு ஏற்பட்டு, 250 ஏக்கர் பரப்பளவில், கம்மாபுரம், சு.கீனனுார் கிராமத்தில் பயிரிடப்பட்ட சம்பா நெற்பயிர் நிலங்களில் மழைநீர் சூழ்ந்தது.
மேலும், மணல் மேட்டின் மழைநீர் கம்மாபுரம் கிராமத்திலுள்ள இரண்டு ஏரிகளில், நேரடியாக புகுவதால், ஏரிகள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், கம்மாபுரம் ஜே.ஜே., நகர் காலனி குடியிருப்பில், ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் வடிகால் வாய்க்கால்கள் துார்வாரி, தண்ணீரை வெளியேற்றும் பணி நடக்கிறது. பரவனாறு ஓடை உடைப்பு ஏற்பட்ட இடத்தை, விருத்தாசலம் சப் கலெக்டர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார். தாசில்தார் கவியரசு, மண்டல துணை தாசில்தார் வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் தனலட்சுமி, துணை பி.டி.ஓ., முருகன், வி.ஏ.ஓ., ஜெயஸ்ரீ, இளநிலை உதவியாளர் சந்துரு, ஊராட்சி செயலர் ரவிச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.