திருத்தணி : பலத்த மழையால், குடிசை வீட்டின் மீது, மற்றொரு வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில், தாய், மகன் படுகாயம் அடைந்தனர்.
திருத்தணி, வள்ளி நகரைச் சேர்ந்தவர், நாகூர்மீரான் மனைவி கோகிலா, 33. இவர், மகன் அக்பர், 17 என்பவருடன், குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர்.நேற்று முன்தினம் இரவு முதல், திருத்தணி நகரில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று, அதிகாலை, 4:00 மணியளவில், கோகிலா வீட்டின், பக்கத்து வீட்டு செம்மண் சுவர் இடிந்து, குடிசை வீடு மீது விழுந்தது.இதில், குடிசை வீடும் சேதம் அடைந்து, துாங்கிக் கொண்டிருந்த தாயும், மகனும் சுவற்றுக்கு அடியில் சிக்கினர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு, அக்கம், பக்கத்தினர் வந்து அக்பரை மட்டும் லேசான காயத்துடன் மீட்டனர்.
திருத்தணி தீயணைப்பு வீரர்கள் வந்து, ஒரு மணி நேரம் போராடி, கோகிலாவை பலத்த காயத்துடன் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து, திருத்தணி வருவாய் துறையினர் மற்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.