இளையான்குடி:ளையான்குடி தாலுகாவில் பெரும்பாலான வி.ஏ.ஓ., கட்டடங்கள் சேதமாகியுள்ளதால், வி.ஏ.ஓ.,க்கள் அங்கு இன்றி பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.
இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பெரும்பாலான வி.ஏ.ஓ., அலுவலகங்கள் சேதமடைந்து உள்ளதால், அங்கு வி.ஏ.ஓ.,க்கள் தங்காமல் தனி அறை எடுத்து தங்குவதால், மக்கள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.இத்தாலுகாவில் உள்ள 5 பிர்க்காக்களில் 50 வி.ஏ.ஓ.,க்கள் வரை உள்ளனர். இவர்களுக்கென வருவாய் குரூப்பில் உள்ள முக்கிய கிராமத்தில் வி.ஏ.ஓ., அலுவலகம் கட்டித்தந்துள்ளனர்.
இதில் பெரும்பாலான கட்டடங்கள் உரிய பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன. பல இடங்களில் முட்புதர்கள் மண்டி வி.ஏ.ஓ., அலுவலகங்கள் புதர்களால் சூழ்ந்து கிடக்கின்றன. இதனால் வி.ஏ.ஓ.,க்கள் விஷச்சந்துக்கள் அச்சத்தில் அலுவலகம் செல்வதில்லை. இன்னும் சில அலுவலகங்களில் மின் இணைப்பே இல்லை.
இதனால் இளையான்குடி, சூராணம், சாலைக்கிராமில் ரூம்கள் எடுத்து அலுவலக பணி பார்க்கின்றனர். இதனால் கையெழுத்து வாங்குவதற்காக கிராமத்தினர் அலைக்கழிக்கப் படுகின்றனர்.இது குறித்து வி.ஏ.ஓ., ஒருவர் கூறியதாவது: பெரும்பாலான வி.ஏ.ஓ., கட்டடங்கள் சேதமடைந்து, முட்புதர்கள் மண்டிக்கிடக்கிறது. மின் இணைப்பும் இல்லாததால் எப்படி தங்குவது. இதனால், அங்கு எங்களது அலைபேசி எண்ணை எழுதி வைத்து வருகிறோம். மக்கள் தொடர்பு கொண்டால் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். மாவட்ட நிர்வாகம் தான் சேதமான கட்டடங்களை புனரமைக்க வேண்டும், என்றார்.