நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்வதால், சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்கு, நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இருப்பினும், ஏரிகளின் மொத்த கொள்ளளவில், தற்போது மூன்றில் ஒரு பங்கு மட்டுமே நீர் இருப்பு உள்ளதால், தற்போதைய மழைக்கு, இந்த ஏரிகள் முழு கொள்ளளவை எட்டுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல், சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் ஏரிகள் வாயிலாக, சென்னையின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இவற்றின் ஒட்டுமொத்த கொள்ளளவு, 11.2 டி.எம்.சி.,யாக உள்ள நிலையில், இரு நாட்களுக்கு முன், இந்த ஏரிகளில், 3 டி.எம்.சி., அளவில் நீர் இருந்தது. இந்த நீரை வைத்து, சென்னையின் குடிநீர் தேவையை சமாளிப்பது கடினம் என்பதால், குடிநீர் வாரியம் மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள் கவலை அடைந்திருந்தனர்.
இந்நிலையில், குடிநீர் ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதிகளில், வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால், நான்கு ஏரிகளுக்கும் நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு, வினாடிக்கு, 1,800 கனஅடி நீர்வரத்தும், புழல் ஏரிக்கு, 1,500 கனஅடி நீர்வரத்தும் இருந்தது. பூண்டி ஏரிக்கு, 750 கனஅடி, சோழவரம் ஏரிக்கு, 550 கனஅடி நீர்வரத்து காணப்பட்டது.இதனால், ஏரிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. நேற்று மாலை நிலவரப்படி, நான்கு ஏரிகளிலும் சேர்த்து, மொத்த நீர் இருப்பு, 4 டி.எம்.சி.,யை நெருங்கி, உயர்ந்து வருகிறது.
தற்போதைய நீர் இருப்பு, குடிநீர் ஏரிகளின் மொத்த கொள்ளளவில், மூன்றில் ஒரு பங்கு மட்டுமே என்பதால், தற்போதைய மழையால், இந்த ஏரிகள் முழு கொள்ளளவை எட்டுமா என்பது சந்தேகம் தான்.ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால், பாதுகாப்பு கருதி, ஏரிகளின் மதகுகள் அமைந்துள்ள பகுதிகளை கண்காணிக்கும் நடவடிக்கைகளை, பொதுப்பணித்துறையினர் துவங்கியுள்ளனர்.சாய்கங்கை நீர் வரும் கிருஷ்ணா கால்வாயை ஒட்டிய ஆந்திர பகுதிகளில், நேற்று, 7.2 செ.மீ., மழை பதிவானது. இதனால், ஊத்துக்கோட்டை ஜீரோ பாயின்ட் எல்லையை கடந்து வினாடிக்கு, 284 கனஅடி நீர், தமிழகத்திற்கு வந்தது.
கடலுார் மாவட்டம், வீராணம் ஏரி, 1.46 டி.எம்.சி., கொள்ளளவு கொண்டது. அங்கு வெளுத்து வாங்கிய மழையால், ஏரி முழுவதும் நிரம்பியுள்ளது. இந்த ஏரிக்கு, வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் நீர்வரத்து உள்ளது. ஏரியின் பாதுகாப்பு கருதி, அவை உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதைத்தவிர, மழையின் தீவிரம் காரணமாக, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள, 89 ஏரிகள், முழு கொள்ளளவிற்கு நிரம்பியுள்ளன. அவற்றில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகின்றன.
இந்த மாவட்டங்களில், 142 ஏரிகள், 75 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளது; 149 ஏரிகள், 50 சதவீதத்திற்கு மேல் நிரம்பியுள்ளன. ஏரிகளை ஆக்கிரமித்துள்ளவர்கள், மழை வெள்ளத்தில் இருந்து தப்பிப்பதற்காக, கரைகளை உடைத்து நீரை வெளியேற்றும் செயல்களில் ஈடுபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். இம்முறை, இதுபோன்று கரைகள் உடைபடுவதை கண்காணிக்க, பொதுப்பணித்துறையினருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
- நமது நிருபர் -