பல்லடம்;பல்லடம் ஒன்றியம் பருவாய் ஊராட்சி ஆறாக்குளம் கிராமத்தில், ஐநுாறுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன.விவசாய தொழில் பிரதானமாக உள்ள அப்பகுதியில், விசைத்தறி, சைசிங் மற்றும் ஓ.இ., மில்களும் உள்ளன. கரடிவாவி துணை மின் நிலைய கட்டுப்பாட்டின் கீழ், இப்பகுதிக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
சில தினங்கள் முன்பு, இப்பகுதியிலுள்ள சிலமின் இணைப்புகள், காரணம் பேட்டையிலுள்ள (சங்கோதிபாளையம்) துணை மின் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.மக்கள் கூறியதாவது:கரடிவாவி துணை மின் நிலையத்தில், ஓவர் லோடு ஆனதால், காரணம்பேட்டை துணை மின் நிலையத்துக்கு, சில இணைப்புகளை மாற்றினர். கரடிவாவி, பல்லடம் மின் நிலையத்தின் கீழும், காரணம்பேட்டை, கோவை மாவட்டம், சூலுார் மின் நிலையத்தின் கீழும் உள்ளன.மின் இணைப்புகள் மாற்றியதிலிருந்து, தொடர்ந்து மின் வெட்டு பிரச்னை நீடித்துவருகிறது.
மின் பயன்பாட்டு கட்டணத்தை கரடிவாவியில் செலுத்திவரும் நிலையில், புகார் குறித்து கூறினால், காரணம்பேட்டையில் தெரிவிக்குமாறும்; கரடிவாவியில் பணம் செலுத்துவதால், அங்கேயே புகார் கூறுங்கள் என, காரணம்பேட்டை அலுவலகத்திலும் கூறுகின்றனர். மின்வெட்டு பிரச்னைக்கு தீர்வு கிடைக்காமல், தொழிலில், நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். மின் வெட்டு பிரச்னையிலிருந்து நாங்கள் விடுபடவும், தடையின்றி மின்சாரம் கிடைக்கவும், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE