பொது செய்தி

தமிழ்நாடு

நாங்களும் வெகுஜன வாழ்க்கையோடு ஒன்றிவிட்டோம்

Added : டிச 02, 2019
Advertisement

தமிழகத்தில், இருளர், காட்டுநாயக்கர், குரும்பர், பன்னியான், தோடர், கோட்டாஸ், பளியர் உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட, பழங்குடியினர் உள்ளனர்.

அடர்ந்த காடுகளும் உயர்ந்த மலைகளும் தான், இவர்களின் இருப்பிடங்கள். சமீபத்தில், சென்னை, கலைவாணர் அரங்கில், 'பழங்குடி நாதம்' என்ற கலை நிகழ்ச்சியை, தமிழக ஆதிதிராவிடர் நலத்துறையுடன் இணைந்து, பழங்குடி ஆய்வு மையம் நடத்தியது.

அதில், ஒவ்வொரு இனக்குழுக்களுக்கும் ஒருவித இசை, நடனம், பாவனைகள் இருந்ததைப் பார்க்க முடிந்தது.தேனி மாவட்டத்தைச்சேர்ந்த பளியர் குழுவை, அழைத்து வந்திருந்து, அந்த இனக்குழுவின் தலைவர் அருவியிடம் பேசினோம்.பளியர் இனம் பற்றி சொல்லுங்களேன்?பழையர் எனும் மூத்த குடி தான், பளியராக மருவி உள்ளது.

தமிழகத்தில், லோயர் கேம்ப், கூடலுார், கம்பம், பளியங்குடி, கரட்டுப்பள்ளி, பெரியகுளம், மானுாத்து, உசிலம்பட்டி, ராஜபாளையம், பழநிமலையின் கீழ்மலை, நடுமலை, மேல்மலை, சிறுமலை, மூலையாறு, வடகரைப்பாறை, வடகாடு, கன்னனுார், கோட்டைவெளி, புளியங்கம், தாழையூத்துக்காடு, கவிச்சிக்கல், மான்கறை, குறவநாச்சியோடை, கோரங்கொம்பு, கடைசிகாடு, பூதமலை. போடி மெட்டு, குரங்கணி, வருஷநாடு, விருதுநகர், மகாலிங்க மலை உள்ளிட்ட இடங்களில் அதிகமாக வாழ்கின்றனர்.அதேபோல், கேரள மாநிலத்தின் தேக்கடி, எட்டாம்பாயலு, கணுக்குடி, புளியமலை, குமுளி, இடுக்கி உள்ளிட்ட பகுதிகளில், பளியர்கள் வாழ்கின்றனர். தமிழகத்தில் மட்டும், 5,000 பேர் இருப்பர்.

எங்களுக்குள், வெவ்வேறு இனக்குழுக்கள் உள்ளன.உங்களின் வாழ்க்கை முறை எப்படிப்பட்டது?தற்காலத்தில், எங்களின் வாழ்க்கை வெகுஜன வாழ்க்கையோடு கலந்துவிட்டது. சுதந்திரத்துக்கு முன்பே, பாதுகாக்கப்பட்ட பகுதியாக, காடுகள் அறிவிக்கப்பட்டதால், நாங்கள், காடுகளை விட்டு வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போதும், அதேநிலை தான் நீடிக்கிறது. எங்களை விட, எங்களின் முன்னோர் கல்வியறிவற்றவர்களாக இருந்தாலும், விலங்குகள், தாவரங்கள் குறித்த அனுபவ அறிவு மிகுதியாக பெற்றிருந்தனர்.

உங்கள் முன்னோர்களின் வாழ்க்கை முறை? அவர்கள், காட்டையும் மலையையும் மட்டுமே நம்பி வாழ்ந்தனர். அவர்கள், ஈ, எறும்புகளுக்கு கூட தீங்கிழைக்க மாட்டார்கள். தேன் எடுத்தல், மூலிகை மருந்துகள் தயாரித்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு, உணவுத் தேவையை பூர்த்தி செய்தனர். அவர்கள், எல்லாவற்றிலும், தர்ம சிந்தனையுடன் செயல்பட்டனர். எங்களால், அப்படி இருக்க முடியவில்லை.இயற்கை குறித்த தெளிவு இருந்தும் ஏன் முடியவில்லை?ஒருபக்கம் காடுகள் அழிந்து வருகின்றன.
இயற்கையில் கிடைக்கும் இஞ்சி, மஞ்சள், களிமஞ்சள், சேனை உள்ளிட்ட மூலிகைப் பொருட்களுக்கு, உரிய விலை கிடைப்பதில்லை. அதனால், மலை, காடுகளில் உள்ள ரிசார்ட்டுகளுக்கும், அருகில் உள்ள கிராமங்களுக்கும் கூலி வேலைக்கு சென்று தான், வாழ்க்கையை ஓட்ட முடிகிறது. என்றாலும், நாங்கள் எளிமையான வீடுகளை அமைத்து, ஆரோக்கியமான, எளிமையான, இயற்கையுடன் இணைந்த, தனித்துவமான வாழ்க்கையை வாழவே விரும்புகிறோம்.

உங்களின் குடும்ப வாழ்க்கை பற்றி சொல்லுங்களேன்?நாங்கள், குழு வாழ்க்கைக்கு பழக்கப்பட்டவர்கள். எங்களுக்குள் மனக்கசப்புகள் இருந்தாலும், யாரையும் ஒதுக்க நினைக்க மாட்டோம். குழு தலைவர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்.ஒவ்வொரு குழுவில் உள்ளோருக்கும், ஒவ்வொரு தனித்துவ அடையாளம் இருக்கும். ஒரே குழுவில் உள்ள பெண்ணை திருமணம் செய்ய மாட்டோம். உதாரணமாக, நாங்கள், பளிச்சியம்மன் என்னும் வனதேவதையை வணங்கும் குழு. இதே தெய்வத்தை வணங்கும் குழுக்கள் எங்கிருந்தாலும், அவர்கள், எங்களின் சகோதரர்கள் தான்.

மாறாக, கருப்பசாமி என்னும், காப்பு வீரனை வணங்கும் குழுவில் பெண்ணெடுப்போம். எங்கள் பெண்கள், கூரைக்கண்டாங்கி அணிவர். அங்குள்ள ஆண்கள் உருமா கட்டுவர். இதுபோல், பல அடையாளங்கள் உள்ளன.அதேபோல், பருவமெய்திய பெண்ணை, தனிக்குடிலில் தங்க வைப்போம். அவளை, முறைப்பையன் தான், இரவும் பகலும் காவல் காப்பான். பின், பருவப்பெண்ணை வீட்டுக்குள் அழைப்பதை, பெரிய விழாவாக கொண்டாடுவோம். அவர்களுக்குள் மனம் ஒன்றிப் போனால், திருமணம் செய்து வைப்போம்.உங்களின் வழிபாட்டு முறை எப்படிப்பட்டது?

பளிச்சியம்மனுக்கு, சித்திரையில், புத்தரிசி, காட்டில் உள்ள அரிய பொருட்களை வைத்து பொங்கலிட்டு வழிபடுவோம். படையலின் போது, எறும்பு முதல் பாம்பு வரை, காட்டில் வாழும் அனைத்து ஜீவராசிகளும், அம்மனோடு இணைந்து உண்ண வேண்டும் என வேண்டி, நிருத்த பாடலைப் பாடுவோம்.கொடிய விலங்குகளுக்கும் வழி விட்டு வாழ்வதே எங்களின் வாழ்வியல்.ஈஞ்சை இலைகள், சீவக்காய் பட்டை உள்ளிட்ட பலவித மூலிகை பாகங்களை வைத்து, உடை தயாரிப்போம்.

பிரம்பு, பளபளக்கும் கொட்டைகளை, ஆபரணங்களாக்கி அணிந்து, ஆடல், பாடலுடன் அம்மனை வழிபடுவோம்.ஆடல், பாடல் பற்றி?திருவிழாவில் ஒய்யாலிப்பாட்டு, பணியின் போது, கோமாளி, கும்மி மற்றும் நெல்குத்தும் பாட்டு, குழந்தைக்கு தொட்டில் பாட்டு, பருவப் பெண்ணுக்கு சடங்குப்பாட்டு, இறப்பில் ஒப்பாரி என, ஆடல், பாடல்கள் இல்லாமல் வைபவங்கள் இருக்காது.

பாடலுக்கு இசையாக, பெருமூங்கிலை வெட்டி செய்யும் முழவு மற்றும் நகாரா, ஜம்பா, உருமி உள்ளிட்ட தோல் கருவிகள், சலங்கை, ஜால்ரா உள்ளிட்டவையும் இடம்பெறும். இந்த இசைக்கருவிகளை வைத்து, ஏற, இறங்க வாசிப்பர். இசை கூடக் கூட, பாடலின் வேகமும் ஆட்டமும் கூடும். மனம் குதுாகலிக்கும். வனதேவதை, எங்களுக்கு எல்லா சக்தியையும் வழங்குவாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X