இந்தியா

தத்தளிப்பு! கனமழையை தாக்கு பிடிக்க முடியாமல் புதுச்சேரி...ஒரே இரவில் 10 செ.மீ., மழை கொட்டியதால் மக்கள் அவதி

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019
Advertisement
 தத்தளிப்பு! கனமழையை தாக்கு பிடிக்க முடியாமல் புதுச்சேரி...ஒரே இரவில் 10 செ.மீ., மழை கொட்டியதால் மக்கள் அவதி

புதுச்சேரி:புதுச்சேரியில் கடந்த நான்கு நாட்களில் 29 செ.மீ., மழை கொட்டியதால், நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது.இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

வளிமண்டலில் ஏற்பட்டுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரியில் கடந்த 27ம் தேதி முதல் கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை வரை 292 மி.மீ., மழை பெய்துள்ளது.நேற்று முன்தினம் மட்டும் 102 மி.மீ., மழை பெய்துள்ளது. நேற்று காலை 8:30 மணி முதல் பகல் 2:30 மணிவரை 50 மி.மீ., மழை பெய்தது. இடைவிடாத மழையால் மக்கள் வீடுகளிலேயே முடங்கினர்.வெள்ளப் பெருக்குநேற்று முன்தினம் கொட்டித் தீர்த்த கனமழையால் பிரதான சாலைகளான, அண்ணா சாலை, காமராஜர் சாலை. நுாறடி சாலை, கோரிமேடு சாலை, இந்திரா சதுக்கம், ராஜிவ் சதுக்கம்.செயின்ட் தெரேசா வீதி, புஸ்சி வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால், நேற்று நகரின் பல பகுதிகளில்போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக முருங்கப்பாக்கம், இந்திரா சிக்னல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய சாலைகளில் மழை நீர் கடல் போல் சூழ்ந்து வாகனங்கள் செல்ல முடியாமல், அணி வகுத்து நின்றதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

குடியிருப்புகள் தத்தளிப்புகனமழையால் ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர், நடேசன் நகர், பூமியான்பேட்டை, ஜவகர் நகர், பாவானர் நகர், விக்டோரியா நகர், சுதானா நகர், தேங்காய்திட்டு, வசந்தன் நகர், மண்ணாடிப்பட்டு காந்தி நகர், சேலியமேடு சமத்துவ நகர் விரிவு, மேல்பரிக்கல்பட்டு பழைய அரசு குடியிருப்பு, இருளஞ்சந்தை உள்ளிட்ட பல்வேறு குடியிருப்பு பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.

மேலும், பல வீடுகளில் மழைநீர் புகுந்ததால், மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.வேகமாக நிரம்பும் நீர் நிலைகள்புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரியான பாகூர் மற்றும் ஊசுட்டேரி வேகமாக நிரம்பிவருகின்றது. 3.5 மீட்டர் ஆழம் கொண்டுள்ள பாகூர் ஏரி 2.1 மீட்டர் அளவிற்கும், ஊசுட்டேரி 1.20 மீட்டர் அளவிற்கு நீர் நிரம்பியுள்ளது. தொடர்ந்து ஏரிக்கு நீர் வந்து கொண்டுள்ளது.அதேபோன்று, கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு, வம்புப்பட்டு, திருக்கனுார், மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் உள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. மேலும், தொடர் கனமழை காரணமாக சங்கராபரணி ஆற்றின் குறுக்கேகூனிச்சம்பட்டு மற்றும் செட்டிப்பட்டு கிராமங்களில் கட்டப்பட்டுள்ள தடுப்பணிகள் நிரம்பி வழிகிறது.

அதேபோன்று, தென்பெண்ணையாற்றில் சித்தேரி மற்றும் கொம்மந்தான்மேடு தடுப்பணைகள் நிரம்பி வழிகிறது.வெள்ள அபாயம்வடகிழக்கு பருவமழை காரணமாக வீடூர் அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. முழு கொள்ளளவான 32 அடியில் 30.2 அடி எட்டியுள்ளது. அணை 31.5 அடி எட்டியதும் உபரி நீர் வெளிேயற்றப்படும்.தற்போது வராக நதியிலிருந்து அணைக்கு வினாடிக்கு 800 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. எனவே எந்த நேரத்திலும் வீடூர் அணையில் இருந்த தண்ணீர் திறந்து விடப்படலாம் என்பதால், பொதுப்பணி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு, சங்கராபரணியாற்றின் கரையோர கிராமங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.பாகூர் ஏரியில் நீர் மட்டம் உயர்வுபாகூர் ஏரி, புதுச்சேரியின் இரண்டாவது பெரிய ஏரி. 3.6 மீட்டர் ஆழம் கொண்ட இந்த ஏரியில் 194 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது. வறண்டு கிடந்த இந்த ஏரி, சில மாதங்களுக்கு முன் பெய்த பருவ மழையில் 1.24 மீட்டர் அளவிற்கு நீர் பிடிப்பு ஏற்பட்டது.

அதன்பிறகு மழை இல்லாததால், நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வந்தது.இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கன மழை காரணமாக பாகூரின் மேற்கு பகுதியில் உள்ள தமிழக பகுதியான துாக்கணாம்பாக்கம், பள்ளிப்பட்டு, குட்டியாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நத்தமேடு வாய்க்கால் வழியாக மழை நீர் பாகூர் ஏரிக்கு வந்து கொண்டுள்ளதால்,ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.நேற்று காலை 8.00 மணி நிலவரப்படி, நீர் மட்டம் 2.10 மீட்டராக உயர்ந்துள்ளது.

பள்ளிகளுக்கு விடுமுறை

அடுத்த மூன்று நாட்களுக்கு கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் புதுச்சேரி பிராந்தியத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை் பள்ளி கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X