மதுரை:'வைகை ஆற்றுக்கும், பொது மக்களுக்கும் உறவு ஏற்படுத்தும் பாரம்பரிய படித்துறை களை மறைக்காமல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என, மதுரை வைகை நிதி மக்கள் இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜன் தலைமையில் நிர்வாகிகள் கலெக்டர் வினய்யிடம் இதுகுறித்து மனு அளித்தனர்.பின் அவர்கள் கூறியதாவது: வைகை கரைகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சுவர் எழுப்பப்படுகிறது. ஆற்றின் கரைகளை சுருக்கியும் ஆற்றுப்பகுதிகளை ஆக்கிரமித்தும் ரோடுகள் அமைத்து சுவர்கள் எழுப்புகின்றனர். சுவர்கள் எழுப்புவதால் பாரம்பரிய படித்துறைகள் மறைக்கப்படுகின்றன.
ஆடிப்பெருக்கு, திருவிழாக்களில் அம்மன் முளைப்பாரி கரைக்க மக்கள் ஆற்றுக்குள் செல்வர். தர்ப்பணம் செய்வர். இதற்காக ஓபுளா, திருமலைராயர், அனுமார் கோயில், பேச்சியம்மன், சந்தைப்பேட்டை, வெங்கடாஜலபதி அய்யங்கார், பட்டறைக்கார, கல்லுக்கடை, தத்தனேரி, விளாங்குடி படித்துறைகள் இருக்கின்றன. இவற்றை மறைக்காமல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.