உடுமலை:உள்ளாட்சி தேர்தல் பணிக்கு ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்களுக்கு மதிப்பூதியம், 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஒன்றியம் சார்பில், மாநில தேர்தல் கமிஷனருக்கு அனுப்பிய மனு: உள்ளாட்சி தேர்தலின் போது, ஓட்டுப்பெட்டிகள் உள்ளிட்ட ஆவணங்களை ஓட்டு எண்ணிக்கை மையத்தில் கொண்டு சேர்க்க நள்ளிரவுக்கு மேல் ஆகிறது. இதில் ஈடுபடும் ஊழியர்கள் ஓட்டு எண்ணிக்கைக்கான ஒருங்கிணைப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. ஓட்டுச்சாவடியில் பணியாற்றிய ஊழியர்களே எண்ணிக்கை பணிக்கும் நியமிக்கப்படுவதால், மனம் மற்றும் உடல் சோர்வு ஏற்படுகிறது.எனவே, இரண்டாம் கட்ட ஓட்டுப்பதிவுக்கும், ஓட்டு எண்ணிக்கை்கும் குறைந்த பட்சம், 3 நாள் இடைவெளி உள்ள வகையில் தேர்தல் அட்டவணை ஏற்படுத்த வேண்டும். ஓட்டுச்சாவடி பணிக்கு குலுக்கல் முறையில் ஊழியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஓட்டுப்பதிவு முதல் பதவியேற்பு நாள் வரை உள்ளாட்சி துறை ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால், இவர்களுக்கு உரிய மதிப்பூதியம் வழங்குவதில்லை. கடந்த லோக்சபா தேர்தலில் வருவாய் துறையினருக்கு வழங்கியது போல் மதிப்பூதியம், 5,000 ரூபாய் ஊரக வளர்ச்சிப் பிரிவு ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE