உடுமலை:தேசிய அளவிலான இணைய வழி அறிவியல் விழிப்புணர்வு திறனாய்வு தேர்வில், உடுமலை மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் விக்யான் பிரசார் நிறுவனம், தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் 'விபா' சார்பில், தேசிய அளவிலான இணையவழி அறிவியல் விழிப்புணர்வு திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் இருந்து சுமார் ஏழாயிரம் மாணவர்கள் பதிவு செய்து இத்தேர்வை எழுதியுள்ளனர்.தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில், திருப்பூர் மாவட்டத்தில் 15 பள்ளிகளில் இத்தேர்வு நடந்தது. மாவட்டம் முழுவதும், 1,020 மாணவர்கள் ஆர்வத்துடன் பதிவு செய்து தேர்வு எழுதினர். 'ஆண்ட்ராய்டு' மொபைல் போன் மூலமாகவும் மற்றும் 'டேப்' கணினி மூலமாகவும் தேர்வு எழுத வாய்ப்பளிக்கப்பட்டது.இத்தேர்வானது புதுமையான ஒரு அனுபவத்தை மாணாக்கர்களுக்கு தந்ததாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர். உடுமலை, ஆர்.ஜி.எம்., பள்ளியில், 12 மாணவர்கள் கம்ப்யூட்டர் மூலமாக தேர்வெழுதினர். தேர்வு கண்காணிப்பாளர்களாக அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சரவணன் மற்றும் எஸ்.வி.ஜி., மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் சுதா ஆகியோர் செயல்பட்டனர்.''இந்த முதல்நிலை தேர்வில் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் இரண்டாம் நிலை தேர்வுக்கு அழைக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகளும் ரொக்கப் பரிசும் சான்றிதழும் கேடயங்களும் வழங்கப்படும். இரண்டாம் நிலைத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் தேசிய அளவிலான முகாமில் பங்கேற்கலாம்.அதில் சிறப்பாக தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேசிய அளவிலான பாராட்டுச் சான்றுகளும் 'ஹிமாலயன்' என்ற விருதும் வழங்கப்படும் மேலும், மாணாக்கர்கள் அறிவியல் சார்ந்த தங்களது சந்தேகங்களுக்கு பதில் பெறும் வண்ணம் பல்வேறு இந்திய அளவிலான விஞ்ஞானிகளோடு கலந்துரையாடும் வாய்ப்பும் கிடைக்கும்,'' என வித்யார்த்தி விஞ்ஞான் மந்தன் மாநில ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான் தெரிவித்தார்.