பந்தலுார்:'பழங்குடியின மாணவர்கள், கல்வியில் சிறந்து விளங்கினால் மட்டுமே சமுதாயம் நலம் பெறும்,' என தெரிவிக்கப்பட்டது.பந்தலுார் அருகே பத்தாம்நம்பர் பழங்குடியின கிராமத்தில், கூடலுார் ஆர்.டி.ஓ. ராஜ்குமார் ஆய்வு செய்தார். அப்போது, 'பழங்குடியினர் படித்தாலும், வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை; கிராமத்திற்கு வரும் அரசுத்துறை அதிகாரிகள் பார்வையாளர்களாக மட்டுமே வந்து செல்கின்றனர்,' என மக்கள் புகார் தெரிவித்தனர்.இதற்கு, ஆர்.டி.ஓ. ராஜ்குமார் கூறுகையில், ''நமக்கான உரிமையை கேட்பது முன்னேற்றம்தான். அதிகாரிகளிடம் குறைகளை கூறி, நிவர்த்தி செய்ய வலியுறுத்த வேண்டும். மாறாக பயப்படுவதும், ஒதுங்கி செல்வதும் வளர்ச்சியை பின்னடைய செய்யும். பழங்குடியினர், தங்கள் குழந்தைகளை, தொடர்ந்து படிக்க வைப்பது அவசியம். இதற்கான உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. பழங்குடியின மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கினால் மட்டுமே, சமுதாயம் நலம் பெறுவதுடன், வாழ்வும் சிறப்பு பெறும்,'' என்றார்.தொடர்ந்து, வருவாய்த்துறை சார்பில், உடைகள் வழங்கப்பட்டது. கிராமத்திற்கு தேவையான வசதிகள், ஓய்வூதியம் வழங்க உறுதி அளிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், கால்நடை டாக்டர் பாலாஜி, கூடலுார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய தலைவர் காளிமுத்து, செயலாளர் சிவசுப்ரமணியம், காந்தி சேவா மைய அமைப்பாளர் நவுசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.