விழுப்புரம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்., மாதம் முதல் பெய்ய துவங்கியது.
கடந்த சில தினங்களாக பெய்த பல மழையால், கடும் வறட்சியில் பாதித்த விழுப்புரம் மாவட்டத்தில் தண்ணீர் பஞ்சம் தீர்ந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியது.இதையடுத்து மீண்டும், வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், மீண்டும் கடந்த சில தினங்களாக மழை பெய்ய துவங்கியுள்ளது. மாவட்டத்தில் பல இடங்களில் கொட்டி தீர்க்கும் கனமழையால் மக்கள் பலரும் வீட்டை விட்டு வெளியேற வழியின்றி, முடங்கி கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.இதனால், எந்த நேரமும் வாகன போக்குவரத்து நிறைந்து காணப்படும், விழுப்புரம் நேருஜி சாலை, திருச்சி, சென்னை நெடுஞ்சாலைகள் மக்கள் மட்டுமின்றி வாகனங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. விழுப்புரம் நகரில் தாழ்வான இடங்களில் சூழ்ந்து மழைநீர், கீழ்பெரும்பாக்கம் தரைப்பாலத்திலும் சூழ்ந்ததால், நேற்று காலை முதல் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.இதையடுத்து, அங்கு நகராட்சி ஊழியர்கள் இயந்திரம் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும் வி.ஜி.பி., நகர், சாலாமேடு உள்ளிட்ட பகுதியில் முழங்கால்அளவு சாலைகளில் தண்ணீர்தேங்கியதால் பொதுமக்கள், வாகனஓட்டிகள் சிரமத்திற்குள்ளானார்கள்.அதே போல், கொத்தமங்கலம், தென்குச்சிப்பாளையம், நாதன்காடுவெட்டி ஆகிய இடங்களில் ரயில்வே சுரங்கப்பாதைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் அவ்வழியாக 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லமுடியாமல் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டு மக்கள் தவித்தனர்.மேலும் மாவட்டம் முழுவதும் முன்பு பெய்த மழையில் 70 ஏரிகள் நிரம்பின. இதே போல் வீடூர் அணை, கோமூகி அணை, மணிமுக்தா அணை ஆகியன நிரம்பியது. இதனிடையே தற்போது பெய்துவரும் கனமழையால் 300 ஏரிகள் நிரம்பியுள்ளன.விழுப்புரத்தில் வி.மருதுார் பகுதியிலும், திருவெண்ணெய்நல்லுார் பகுதி உட்பட இரு வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்துள்ளது.
இதில், யாருக்கும் எந்தவித காயம் ஏற்படாமல் தப்பித்துள்ளனர்.மாவட்டத்தில் தொடரும் கன மழையால், தீவிர கண்காணிப்பில் வருவாய்த்துறை, காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழையளவு விபரம் :விழுப்புரத்தில், 57 மி.மீ., திண்டிவனம் 61 மி.மீ., வானூர் 92 மி.மீ., மரக்காணம் 117 மி.மீ., செஞ்சி 38 மி.மீ., திருக்கோவிலூர் 53 மி.மீ., உளுந்தூர்பேட்டை 131 மி.மீ., சங்கராபுரம் 35 மி.மீ., கள்ளக்குறிச்சி 68 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.