சென்னிமலை: சென்னிமலையில், புது தொழிலாக நூல் முறுக்குதல் (டபுளிங் யூனிட்) தொழில், வேகமாக வளர்ந்து வருகிறது. சென்னிமலை பகுதி, ஜவுளி சார்ந்த தொழில் பகுதியாக திகழ்கிறது. கைத்தறி துணி உற்பத்தி அதையடுத்து விசைத்தறிகளில் உற்பத்தி, இது தொடர்பான உப தொழில் சாயப்பட்டறைகள், நூல் விற்பனை கடைகள் என நீண்டு கொண்ட போகிறது. இதில் தற்போது, டபுளிங் யூனிட் தொழில் பிரபலமாகி வருகிறது. கோவை போன்ற பெருநகரங்களில் மில்களில் செய்த தொழிலை, குடிசை தொழில் போல், சென்னிமலையில் ஆரம்பித்து வருகின்றனர். இரண்டு ஆண்டுகளாக தான், பிரபலமடைந்து வருகிறது. இந்த தொழில் 'ஜாப் ஒர்க்' முறையில் நடக்கிறது. இதனால் அதிக முதலீடு தேவைப்படுவதில்லை. எனவே, சிறு முதலாளிகள் கூட, டபுளிங் மிஷின் வாங்கி, தொழிலை தொடங்கும் நிலை உள்ளது. இந்தவகையில்தான், 125 யூனிட்களுக்கு மேல் வளர்ந்து நிற்கிறது. அதிக ஆட்கள் தேவைப்படுவதில்லை. குடும்ப உறுப்பினர்களே பணி புரிந்து தொழில் நடத்தலாம் என்பதால், பலர் இத்தொழிலுக்கு ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு தொடர்ந்து வேலை வழங்க, சென்னிமலை நூல் வியாபாரிகளும், விசைத்தறி முதலாளிகளும் தயாராக உள்ளனர். அரசும், 500 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்குவதால், நாளுக்கு நாள் டபுளிங் யூனிட், அதிகரித்து வருவதாக, சென்னிமலை பகுதி மக்கள் தெரிவித்தனர்.