குப்பை வாகனத்துக்கு வலை போடலாமே: தாரமங்கலம் பஸ் ஸ்டாண்ட், காய்கறி சந்தை, ஓட்டல், வணிக வளாகம் என, தினமும், 4 டன் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. அவற்றை டிராக்டர், மினி டோர் வேன், பேட்டரி வேன் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. அப்போது அளவுக்கு அதிகமாக குப்பையை எடுத்து செல்வதால் காற்றினால் சாலையிலும், வாகனங்களில் செல்வோர் மீதும் விழுகிறது. எனவே குப்பை கீழே விழா வகையில், வாகனங்களுக்கு வலையை போடலாமே.
ரயில்வே மேம்பால சுவரில் விரிசல்: தலைவாசல், பட்டுத்துறையில் இருந்து நாவக்குறிச்சி செல்லும் சாலை குறுக்கே, சேலம்-விருதாச்சலம் ரயில் பாதை செல்கிறது. பட்டுத்துறை பஸ் நிறுத்தம் அருகில், ரயில்வே உயர்மட்ட பாலம் உள்ளது. இதன் மேல்பகுதியில் உள்ள தடுப்புச்சுவரில், பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுவர் சற்று சாய்வான நிலையில் இருப்பதால், ரயில் செல்லும் அதிர்வினால் சரிந்து விழும் அபாயம் உள்ளது. விரிசலை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மூடாத ஆழ்துளை கிணறால் ஆபத்து: கொளத்தூர், காவேரிபுரம் ஊராட்சி, மேட்டூர்-மைசூரு நெடுஞ்சாலையில், சிவிலிகரடு பாலம் அருகே, வாஞ்சிநகர் செல்லும் சாலையோரம், சில ஆண்டுகளுக்கு முன்பு, அரசு சார்பில் ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. தண்ணீர் இல்லை என காரணம் கூறி, அந்த ஆழ்துளை கிணற்றை முறைப்படி மூடாமல், கல் வைத்து மூடி வைத்துள்ளனர். அந்த கல்லை அகற்றும் பட்சத்தில், குழந்தைகள் குழியில் விழுந்து பாதிக்கும் அபாயம் உள்ளது.
மண்குவியலால் சறுக்கும் வாகனங்கள்: மகுடஞ்சாவடி, காளிகவுண்டம் பாளையம் பிரிவு தாபா அருகே, சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில், சில ஆண்டுகளாக பல மீட்டர் தூரத்திற்கு மண் பரவி காணப்படுகிறது. இதனால் இருசக்கரவாகன ஓட்டிகள், வெள்ளை கோட்டை கடந்து நான்கு சக்கரவாகனங்கள் செல்லும் பாதையில் செல்வதால், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில், இருசக்கரவாகன ஓட்டிகள் மண்ணில் சறுக்கி கீழே விழுகின்றனர்.
பயன்பாட்டுக்கு வராத நூலக கட்டடம்: கொங்கணாபுரத்தில், 2009ம் ஆண்டு நூலக கட்டடம் கட்டப்பட்டது. இன்னும் திறக்கப்படவில்லை. ஜன்னல், கதவு, அதனுள்ளே உள்ள புத்தக மர அடுக்குகள் உடைந்துள்ளன. நூலகத்திற்காக கட்டப்பட்ட இக்கட்டடம், பயன்படுத்தாமலேயே உள்ளதால் சிதிலமடைந்துள்ளது. இதனால், அப்பகுதியில் உள்ள வாசகர்கள் மற்ற பகுதியில் உள்ள நூலகங்களுக்கு சென்று வருகின்றனர். அதனால், இனியாவது, நூலக கட்டடத்தை சரிசெய்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவது அவசியம்.