திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர் கோவிலில் தீப திருவிழா, கொட்டும் மழையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. பக்தர்கள், 'அண்ணாமலையாருக்கு அரோகரா' கோஷம் எழுப்பி வழிபட்டனர்.
திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் கொண்டாடப்படும் கார்த்திகை தீப திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை, 3:00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. மூலவர் மற்றும் உற்சவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலைஅம்மன், பஞ்ச மூர்த்திகளான விநாயகர், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர், பராசக்தி அம்மன் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து பஞ்ச மூர்த்திகள், சுவாமி தங்கக்கொடி மரம் முன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் வேதமந்திரம் முழங்க, விருச்சிக லக்னத்தில் காலை, 6:15 மணிக்கு கொட்டும் மழையில், 63 அடி உயர தங்கக்கொடி மரத்தில் கொடியேற்றம் நடந்தது. அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், கலெக்டர் கந்தசாமி, கோவில் இணை ஆணையர் ஞானசேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முதல் நாள் விழாவில், சுவாமிகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு, 9:00 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவில், விநாயகர் மூஷிக வாகனம், வள்ளி தெய்வானை சமேத சுப்பரமணியர் மயில் வாகனம், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேசஸ்வரர் வெள்ளி அதிகார நந்தி, பராசக்தி அம்மன் வெள்ளி சிம்மவாகனம், சண்டிகேஸ்வரர் புலிக்குட்டி வாகனத்திலும், வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வரும், 7ல், பஞ்சமூர்த்திகள் தேரோட்டம், 10 அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் கருவறை எதிரில் பரணி தீபம், மாலை, 6:00 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபம் ஏற்றப்பட உள்ளது. தீப திருவிழாவையொட்டி, கோவில் வளாகம், நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது.