புதர்மண்டிய வாணியாறு அணை பிரிவு: கால்வாய்களை தூர்வார வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புதர்மண்டிய வாணியாறு அணை பிரிவு: கால்வாய்களை தூர்வார வலியுறுத்தல்

Added : டிச 02, 2019

பாப்பிரெட்டிப்பட்டி: புதர் மண்டியுள்ள, வாணியாறு அணையின் பிரிவு கால்வாய்களை தூர்வார வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த முள்ளிக்காடுவில், வாணியாறு அணை உள்ளது. இதன் மூலம், வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், தென்கரைகோட்டை, பூதநத்தம் உள்ளிட்ட, 16 கிராமங்களில் உள்ள புதிய ஆயக்கட்டு மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதிகளை சேர்ந்த, 10 ஆயிரத்து, 517 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. வெங்கடசமுத்திரம், ஆலாபுரம், பறையப்பட்டி, ஓந்தியாம்பட்டி, தென்கரைகோட்டை ஆகிய ஐந்து ஏரிகளுக்கு தண்ணீர் செல்கிறது. இதேபோல், வெங்கடசமுத்திரம், மோளையானூர், பி.துறிஞ்சிப்பட்டி பஞ்.,க்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், தண்ணீர் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில், வாணியாறு அணையின் பிரிவு கால்வாய்கள் தூர்வாரப்படாமல், புதர்மண்டியுள்ளதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: வலது மற்றும் இடதுபுற கிளை கால்வாய்கள், முறையாக தூர்வாரப்படவில்லை. இதனால், பல கிலோ மீட்டர் தூரத்திற்கு கால்வாயில் செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியுள்ளதால், அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் கடைமடை வரை செல்லுமா? என்ற கேள்வி எழுந்துள்ளதுடன், தண்ணீர் வீணாகும் நிலையுள்ளது. எனவே, கிளை கால்வாய்களை தூர்வார, பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X