ஓசூர்: ஓசூர், ஸ்டேன்போர்டு பப்ளிக் பள்ளியில், பள்ளிகளுக்கு இடையேயான அறிவியல் கண்காட்சி நடந்தது. பள்ளி தாளாளர் எம்ஜியார் தலைமை வகித்தார். ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர் வேதபிரகாஷ், கண்காட்சியை துவக்கி வைத்து பார்வையிட்டார்.
ஓசூர் கல்வி மாவட்டத்தில் உள்ள, 11 பள்ளிகளில் இருந்து, 500 மாணவ, மாணவியர் பங்கேற்று, தங்களது படைப்புகளை காட்சிப்படுத்தினர். சந்திரயான் செயற்கைக்கோள் தயார் செய்து காட்சிப்படுத்திய செம்போர்டு பள்ளி முதலிடம் பெற்று, 10 ஆயிரம் ரூபாய் பரிசுத்தொகையை பெற்றது. நச்சு பொருட்களை பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் தண்ணீர் சுத்திகரிப்பு கருவியை வடிவமைத்து காட்சிப்படுத்திய, விஜய் வித்யாலயா பள்ளி இரண்டாம் இடம் பெற்று, 7,500 ரூபாய் பரிசு தொகையையும், ஆழ்துளை கிணற்றில் தவறி விழும் குழந்தைகளை மீட்கும் கருவி வடிவமைத்த வனபிரச்தா பள்ளி மூன்றாம் இடம் பெற்று, 5,000 ரூபாய் பரிசு தொகையையும் பெற்றன. மாவட்ட கலெக்டர் பிரபாகர், முதல் மூன்று இடங்களை பெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். ஸ்டேன்போர்டு பள்ளி நிர்வாகிகள் சுசிலா எம்ஜியார், பாஸ்கரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
* கணிதம், அறிவியல், தொன்மை மன்றங்கள் சார்பில் நடந்த அறிவியல் கண்காட்சியை, தலைமை ஆசிரியை கல்விக்கரசி துவக்கி வைத்தார். இதில், சொட்டுநீர் பாசனம், அமில மழை, மழைநீர் சேகரிப்பு, டெங்கு ஒழிப்பு, உயிரியல் பூங்கா, பனி பிரதேசத்தில் பாதுகாப்பான குடில், பிதாகரஸ் தேற்றம், கணித அறிஞர்கள் தொகுப்பு, கணித அளவீடுகள், பாதுகாப்பான ஏ.டி.எம்., மிஷின் ஆகிய படைப்புகள் வைக்கப்பட்டிருந்தன. சத்துள்ள காய்கறி, கீரை உள்பட உணவு வகைகளும் அதில் இடம்பெற்றிருந்தன. இதை ஆறு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவியர் அனைவரும் பார்த்து ரசித்ததுடன், குறிப்புகள் எடுத்துக்கொண்டனர். இக்கண்காட்சியை, அதே வளாகத்தில் உள்ள நகராட்சி துவக்கப்பள்ளி மாணவ, மாணவியரும் பார்த்து ரசித்தனர். ஏற்பாடுகளை, ஆசிரியைகள் லதா, ரேவதி, சாரதி, தமிழ்ச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.