குளித்தலை: குளித்தலை பகுதியில், தாழ்வான இடங்களில் மழை தண்ணீர் தேங்கி நின்றதால், இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குளித்தலை மற்றும் சுற்று வட்டார காவிரி டெல்டா பகுதியில், கடந்த ஒருவாரமாக கனமழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனார். ஆனால், தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் நகரின் தாழ்வான பகுதிகளில், மழைநீர் வெளியேற வசதி இல்லாததால், அதிகளவில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக கடம்பர்கோவில், சப் - கலெக்டர் அலுவலகம், அரசு மகளில் மேல்நிலைப்பள்ளி, நெடுஞ்சாலை துறை அலுவலகம், பயணியர் விடுதி, பள்ளிவாசல் தெரு ஆகிய பகுதிகளில், பல நாட்களாக மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில் அரசு அலுவலகம் மற்றும் தெருக்களில் தேங்கி நிற்கும் மழை நீரை, பணியாளர்கள் அப்புறப்படுத்தாததால் டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியாகும் வாய்ப்பு உள்ளதாக, பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். எனவே, நகராட்சி பணியாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுத்து, தேங்கி நிற்கும் மழைநீரை உடனடியாக அப்புறப்படுத்துவதோடு, நோய் தடுப்பு நடவடிக்கையாக, பிளிச்சிங் பவுடர் தெளிக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.