மோகனூர்: சாலையில், டிராவல்ஸ் வேன் கவிழ்ந்த விபத்தில், 10 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த கீழசெந்தில்பாவடையை சேர்ந்த வேன் டிரைவர் ராஜசேகரன், 35. இவர், லாலாபேட்டையில் இருந்து, நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டி அருகே உள்ள திப்ரமாகதேவியில் நடக்கும் காதுகுத்து விழாவுக்கு, டிராவல்ஸ் வேனில், பயணிகளை ஏற்றிக் கொண்டு, நேற்று காட்டுப்புத்தூர் வழியாக வளையப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். மதியம், 12:30 மணிக்கு, ஆலாம்பட்டி அருகே சென்றபோது, சாலையை கடந்து மாடு சென்றது. அதிர்ச்சி அடைந்த டிரைவர் ராஜசேகரன், தனது வேனை திருப்பி உள்ளார். அப்போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், திண்டுக்கல், நெல்லை, கருர் மாவட்டத்தை சேர்ந்த ரஞ்சிதா, 23, வாசுதேவநல்லூர் லோகேஸ்வரி, 17, கிருஷ்ணவேணி, 25, முனிஸ்வரி, 26, லட்சுமி, 28, காளிஸ்வரி, 22, சாந்தாமணி உள்பட, 10 பேர் லேசான காயமடைந்தனர். அவர்களை, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு, அரூர் ஆலம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று, வீடு திரும்பினர். சம்பவம் குறித்து மோகனூர் போலீசார் விசாரிக்கின்றனர்.