இந்த செய்தியை கேட்க
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் அதிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், வடகிழக்கு பருவமழை தற்போது வலுவடைந்துள்ளது உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 17 இடங்களில் கனமழையும், 3 இடங்களில் மிக கனமழையும் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மேட்டுப்பாளையம் - 18 செ.மீ., குன்னூர் - 13 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் பரவலாகவும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ,ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், டெல்டா மாவட்டங்கள், அரியலூர், பெரம்பலூர், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தேனி, திண்டுக்கல், நீலகிரி , கோவை, ஆகிய மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யலாம். டிச., 3, 4 தேதிகளில் தென்தமிழகத்தின் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மன்னார் வளைகுடா, மாலத்தீவுகள், லட்சத்தீவுகள், குமரி கடல்பகுதி, தென்மேற்கு வங்கக்கடல், இலங்கையை ஒட்டியுள்ள கடல்பகுதியில் சூறைக்காற்று வீசுவதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.
வடகிழக்கு பருவமழை 11 சதவீதம் அதிகம் பெய்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஓமன் நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும். இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.