இந்த செய்தியை கேட்க
புதுடில்லி: உ.பி., மாநில காங்., பொதுச்செயலாளரான பிரியங்காவின் டில்லி வீட்டில் 5 பேருடன் கார் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக காங்., கட்சியினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காங்., தலைவர்களான சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கு வழங்கப்பட்ட எஸ்.பி.ஜி., எனப்படும் சிறப்பு அதிரடிப்படையின் பாதுகாப்பு சமீபத்தில் விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில் டில்லியின் லோதி எஸ்டேட்டில் உள்ள பிரியங்காவின் வீட்டில் திடீரென காரில் 5 பேர் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பிரியங்கா வீட்டிற்குள் புகுந்த கார், தோட்டத்தின் வலதுப்புறமாக திரும்பியது. காரில் வந்தவர்கள் பிரியங்காவுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளப்போகிறோம் என கூறிவிட்டு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த பாதுகாப்பு குறைபாடு கடந்த நவ.,25ம் தேதி நடந்ததாகவும், அந்த நாளில் பிரியங்காவை சந்திக்க யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை எனவும் பிரியங்காவின் அலுவலகம் உறுதி செய்திருக்கிறது.
ஆனாலும், இந்த தகவல் தற்போது வெளியாகியிருப்பதை அடுத்து மிக முக்கிய விஐபி.,களில் ஒருவரான பிரியங்காவின் பாதுகாப்பில் குறைபாடு நேர்ந்துள்ளதாக காங்., கட்சியினர் கண்டித்துள்ளனர். மேலும், இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.