எந்நேரமும் பன்னீர் மழை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எந்நேரமும் பன்னீர் மழை

Added : டிச 02, 2019

ஆர்.கே.பேட்டை : கிராமத்தில் நுழைபவர்களை, மலர் துாவி வரவேற்கும் விதமாக அமைந்துள்ள, பன்னீர் புஷ்ப மரம், பொதுமக்களின் அபிமானத்தை பெற்றுள்ளது. பழமையான மரங்களின் பயனை உணர்த்தும் விதமாக இது அமைந்து உள்ளது.

வானுயர வளர்ந்தாலும், கடும் சூறாவளியையும், வளைந்து கொடுத்து சமாளிக்கும் பன்னீர் புஷ்பம் மரம், தற்போது, அரிதாகி வருகிறது.ஆர்.கே.பேட்டை, விசாலீஸ்வரர் கோவில் வளாகம், பாலாபுரம் என, ஆர்.கே.பேட்டை வட்டாரத்தில் விரல் விட்டு எண்ணக்கூடிய நிலையில், இந்த மரங்களின் எண்ணிக்கை உள்ளது.இந்த மரம், 60 - 80 அடி உயரம் வரை வளரும். மிகவும் மென்மையானது. இதன் கிளைகள், எளிதாக வளைந்து கொடுக்கும் தன்மை கொண்டது என்பதால், கடும் சூறாவளியையும் எளிதாக சமாளிக்கின்றன.

வெண்ணிற குழல்கள் போன்று கொத்து, கொத்தாக பூக்கும் இதன் பூக்கள், இந்த மரத்தின் சிறப்பு. எண்ணிலடங்கா பூக்கள் எந்நேரமும் உதிர்ந்து கொண்டே இருக்கும்.இந்த மரத்தின் அடியில், வெள்ளை கம்பளம் விரித்தது போல், பூக்கள் பரவிக் கிடக்கும். ரம்மியமான மணம் கொண்டது, இந்த மரத்தின் பூக்கள்.காற்று வீசும் போதெல்லாம், பன்னீர் துாவுவதுபோல் இதன் பூக்கள் உதிர்ந்து கொண்டே இருக்கும். எவ்வளவு பூக்கள் மலரும், எவ்வளவு உதிரும் என்பது, யாரும் கணக்கிட முடியாது.

ஆர்.கே.பேட்டை அடுத்த, பாலாபுரம் ஊராட்சி எல்லையில், நெடுஞ்சாலையோரம் வளர்ந்துள்ள பன்னீர் புஷ்பம் மரத்தில் இருந்து, தற்போது பூக்கள் ஏராளமாக மலர்ந்துள்ளன.அவ்வழியாக செல்பவர்கள், இந்த, 'மலர் மழை'யில் நனையாமல் தப்பிக்க முடியாது. பழமையான மரங்களின் அதிசயங்களில் இதுவும் ஒன்று.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X