நிறுவன வரி குறைப்பு; நிர்மலா சீதாராமன் விளக்கம்| Dinamalar

நிறுவன வரி குறைப்பு; நிர்மலா சீதாராமன் விளக்கம்

Updated : டிச 02, 2019 | Added : டிச 02, 2019 | கருத்துகள் (18)
BJP,Nirmala,Nirmala Sitharaman,நிர்மலா,நிர்மலா சீதாராமன்,GST,petrol,diesel

புதுடில்லி: 'முதலீடுகளை ஈர்த்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்தில் தான், நிறுவனங்களுக்கான வரி குறைக்கப்பட்டது' என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், லோக்சபாவில் தெரிவித்தார்.

கடந்த செப்டம்பரில், அவசர சட்டம் மூலம், நிறுவனங்களுக்கான வரி விகிதம், 30லிருந்து, 22 சதவீதமாக குறைக்கப்பட்டது. அத்துடன் தயாரிப்பு துறையில் புதிய நிறுவனங்களுக்கு, வரி 15 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த அவசர சட்டத்திற்கு மாற்றாக, வரிச் சட்டங்கள் திருத்த மசோதா லோக்சபாவில் நிறைவேறியது.

விவாதத்தின் போது அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: வளரும் நாடுகள் மற்றும் அண்டை நாடுகள் பலவும் அன்னிய முதலீடுகளை ஈர்க்க, வரி விகிதத்தை குறைத்துள்ளன. அதை பின்பற்றி, முதலீடுகளை ஈர்க்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், நிறுவனங்கள் வரி குறைக்கப்பட்டது.

அமெரிக்கா - சீனா இடையிலான வர்த்தகப் போர் காரணமாக, அன்னிய நிறுவனங்கள், முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்ற விரும்புகின்றன. அத்தகைய நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்க, வரி குறைப்பு அவசியம் என அரசு கருதி நடவடிக்கை எடுத்துள்ளது. அதேசமயம், சாப்ட்வேர் உருவாக்கம், பளிங்கு கற்களை 'ஸ்லாப்' ஆக மாற்றுவது, 'கேஸ்' சிலிண்டர் நிரப்புதல், புத்தக அச்சடிப்பு, திரைப்படம் ஆகியவை, புதிய தயாரிப்புகளாக கருதி வரிச்சலுகை பெற முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.






ஜி.எஸ்.டி., வரம்புக்குள் பெட்ரோல்?

மற்றொரு விவாத்தில், நிர்மலா பேசுகையில், 'பெட்ரோல், டீசல் மீதான வரிகளை குறைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை. உலகில் எந்த நாட்டிலும், பெட்ரோல், டீசல் விலை, ஒரே சீராக இருப்பதில்லை. ஜி.எஸ்.டி., வரம்புக்குள் இவற்றை கொண்டு வரும் திட்டமில்லை. ஏற்கனவே, ஜி.எஸ்.டி.,யில் பூஜ்ய வரிவிதிப்புக்குட்பட்ட பொருட்களாக இவை உள்ளன' என்றார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X