சென்னை; கன மழை நீடிப்பதால், தமிழகத்தின் மின் தேவை, 2,000 மெகா வாட் வரை சரிந்துள்ளது.தமிழகத்தின் மின் தேவை, தினமும் சராசரியாக, 14 ஆயிரம் மெகா வாட்டாக உள்ளது; கோடை காலத்தில், 16 ஆயிரம் மெகா வாட்டை தாண்டுகிறது.
வட கிழக்கு பருவ மழை காலம் அக்டோபரில் துவங்கியது. நவம்பர் மூன்றாம் வாரம் வரை, எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால், மின் தேவையும் குறையாமல்,13 ஆயிரம் மெகா வாட்டாக இருந்தது.சில தினங்களாக, பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால், நவம்பர், 28, 29ல், மின் தேவை, 12 ஆயிரம் மெகா வாட்டாக குறைந்தது. சனிக்கிழமை முதல் மின் தேவை அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், கன மழை பெய்கிறது.
இதையடுத்து, தமிழகத்தின் மின் தேவை, தற்போது, 10 ஆயிரம் மெகா வாட்டாக குறைந்துள்ளது. இது, மழையின் தீவிரத்தை பொறுத்து மேலும் குறையலாம்.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:வழக்கமாக டிசம்பரில்,மின் தேவை, 12 ஆயிரம்மெகா வாட்டாக இருக்கும். தற்போது, கன மழை பெய்வதாலும், பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளதாலும், மின் தேவை, 3,000 மெகா வாட் வரை குறைந்துள்ளது. பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட்டாலும், 1,000 மெகா வாட் வரை மின் தேவை அதிகரிக்கலாம். இதனால், மழையால் மட்டும், மின் தேவை, 2,000 மெகா வாட் குறைந்து உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.